வழிபாடு

மருதமலை முருகன் கோவில் நடை திறப்பு நேரம் குறைப்பு

Published On 2022-06-17 06:02 GMT   |   Update On 2022-06-17 06:02 GMT
  • கொரோனா பாதிப்பு காரணமாக பல மாதங்கள் கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர்.
  • ஊரடங்குக்கு முன்பு வரை கோவில் இரவு 9 மணி வரை திறக்கப்பட்டிருந்தது.

கோவை மருதமலையில் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதியாக காணப்படுகிறது. இங்கு யானை, சிறுத்தை, கரடி உள்பட பல்வேறு வன உயிரினங்கள் வாழ்கின்றன.

இந்த வனவிலங்குகள், அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையிலும், படிக்கட்டுகளிலும் இரவு நேரங்களில் வன உயிரினங்கள் நடமாடுவது வழக்கம்.

கொரோனா பாதிப்பு காரணமாக பல மாதங்கள் கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கபடாமல் இருந்தனர். அந்த சமயங்களில் கோவில் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமானது.

ஊரடங்குக்கு முன்பு வரை கோவில் இரவு 9 மணி வரை திறக்கப்பட்டிருந்தது. ஊரடங்கு விலக்கப்பட்ட பின் மீண்டும் கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது காட்டு யானைகள் நடமாட்டத்தை காரணம் காட்டி கோவில் நடை திறப்பு நேரம் ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டது.

கோவில் நடை மூடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே அடிவாரத்தில் இருந்து வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் இரவு 7.30 மணிக்கு மேல் வாகனங்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி அதிகாலை 3.45 மணியளவில் கோவிலுக்கு அருகே சிறுத்தை நடமாடுவது அங்கிருந்த சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனை பார்த்ததும் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில் யானை மற்றும் சிறுத்தை நடமாடுவதை கருத்தில் கொண்டு கோவிலுக்கு வருவதற்கு பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இரவு 7 மணிக்கு மேல் பக்தர்கள் செல்வதற்கு தடையும் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக பிளக்ஸ் பேனரும் மலையடிவாரத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தலின் படி மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு பக்தர்கள் 7 மணிக்கு பிறகு அனுமதிக்கப்படுவது கிடையாது. கோவில் நடை இரவு 8 மணிக்கு மூடப்படுகிறது.

இதுபற்றி வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு தெரியவில்லை. பலர் மாலையில் கோவிலுக்கு வந்து பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறும்போது, வனத்துறை அறிவுறுத்தலின் பேரில் தான் கோவில் நடை திறப்பு நேரம் குறைக்கப்பட்டது. படிக்கட்டுகள் வழியே பக்தர்களை அனுமதிக்காமல் இரவில் வாகனங்களில் மட்டும் அனுமதிப்பதற்கு மேலும் ஒரு மணி நேரம் அவகாசம் கேட்டு வனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்படும் என்றனர்.

Tags:    

Similar News