மருதமலையில் சுப்பிரமணியசுவாமி - வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம்
- திருக்கல்யாணத்தை முன்னிட்டு மண்டபம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
- பக்தர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
கோவையை அடுத்த மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகனின் 7-வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 26-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம் ஹார நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.
நேற்று காலை 6 மணிக்கு கோ பூஜை நடைபெற்றது. பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து மூலவருக்கு யாகசாலை கலசங்கள் மூலம் அபிஷேகம் நடைபெற்றது. விநாயகர் பூஜை, புண் யாகம் கலசங்கள், ஆவாகனம், கணபதி வேள்வி நடந்தது. காலை 9 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானையுடன் ஆதி மூலஸ்தானத்தின் முன்புறம் உள்ள திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு மண்டபம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதில் சுப்பிரமணிய சுவாமி வெண் பட்டு உடுத்தியும், வள்ளி பச்சை பட்டு உடுத்தியும் தெய்வானை அம்மன் சிவப்பு பட்டு உடுத்தியும் எழுந்தருளினர். இதையடுத்து சுவாமிக்கும் வள்ளி தெய்வானைக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து கணபதி வேள்வி பூஜை, தாரை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.
சரியாக 10.25 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் மருதமலை முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா, என பக்தி முழக்கமிட்டனர். பக்தர்களுக்கு மாங்கல்ய பிரசாதம் குங்குமம், மஞ்சள் மாங்கல்ய கயிறு ஆகியவை வழங்கப்பட்டது. அதை பெண்கள் அணிந்து கொண்டனர். பக்தர்கள் சுவாமிக்கு மொய்ப்பணம் எழுதினர். இதில், மொத்தம் ரூ.57ஆயிரத்து 910 வசூல் ஆனது.
அதைத்தொடர்ந்து பொற்சுன்ன பாடல் பாடி சுவாமிக்கும் வள்ளி, தெய்வானைக்கும் மஞ்சள் அணிவிக்கப்பட்டது. பாத காணிக்கை செலுத்துதல், பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் புஷ்ப பல்லக்கில் கோவிலை சுற்றி வீதி உலா வந்தார். கந்த சஷ்டி விரதம் இருந்த பக்தர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. அதை சாப்பிட்டு அவர்கள் விரதத்தை முடித்துக் கொண்டனர்.
திருக்கல்யாணத்தையொட்டி மலைப்பாதையில் செல்ல 2 சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட வில்லை. கோவில் சார்பில் மினி பஸ்கள் இயக்கப் பட்டன. விழா ஏற்பாடுக ளை மருதமலை சுப்பிரமணியசாமி கோவில் துணை ஆணையர் ஹர்ஷினி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.