ஊஞ்சல் உற்சவத்திற்கு பிரசித்திபெற்ற மேல்மலையனூர்
- அமாவாசை நாளில் ஊஞ்சல் உற்சவம் நடத்தப்படுகிறது.
- ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தை தரிசனம் செய்வது இரட்டிப்பு பலனை தரும்.
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி மகிமைகள் பல கொண்டது. அந்த மகிமையை உணர வேண்டுமானால் அந்த ஊஞ்சல் உற்சவத்தை நேரில் சென்று தரிசனம் செய்தால்தான் உணர முடியும்.
மலையனூர் தலத்தில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளில் இந்த ஊஞ்சல் உற்சவம் நடத்தப்படுகிறது. நள்ளிரவு 11 மணி முதல் 12.30 மணி வரை அங்காளம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டுவார்கள்.
அந்த சமயத்தில் அங்காளம்மனை நாம் வழிபட்டால், ஏற்கனவே மனம் குளிர்ந்துள்ள அம்மன் நாம் கேட்கும் வரத்தை எல்லாம் வாரி, வாரி வழங்குவாள் என்பது ஐதீகம். அதிலும் ஆடி அமாவாசை நடைபெறும் ஊஞ்சல் உற்ச வத்தை தரிசனம் செய்வது இரட்டிப்பு பலன்களைத் தரக் கூடியதாகும்.
சரி... இந்த ஊஞ்சல் உற்சவத்தை ஏன் நடத்துகிறார்கள் தெரியுமா?
பிரம்மனின் தலையை வெட்டியதால் சிவன் கையில் அந்த கபாலம் ஒட்டிக் கொண்டது. இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
மலையனூரில் புற்றில் வீற்றிருந்த அங்காளம்மன், விஸ்வருபம் எடுத்து, தனது காலால் பிரம்ம கபாலத்தை மிதித்து பூமிக்குள் அமுக்கி, சிவனுக்கு ஏற்பட்டிருந்த பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கினார். அதன் பிறகே சிவபெருமானுக்கு பாவவிமோசனம் கிடைத்தது.
ஆனால் விசுவரூபம் எடுத்த அங்காளம்மனின் சீற்றமும், ஆக்ரோஷமும் குறையவில்லை. அது மட்டுமின்றி தன்னை நாடி தேடி வரும் ஒவ்வொரு பக்தனையும் பிடித்துள்ள தீய சக்திகளையும் அங்காளம்மன் வீறு கொண்டு அழிக்கிறாள் என்பதை பக்தர்கள் முழுமையாக நம்புகிறார்கள்.
இப்படி தினம், தினம் தீய சக்திகளை விரட்ட ஆங்காரம் கொள்ளும் அம்மனை அமைதிப்படுத்தி, சாந்தம் செய்யவே, அமாவாசை நள்ளிரவு அவளை ஊஞ்சலில் வைத்து தாலாட்டுகிறார்கள். இதைத்தான் ஊஞ்சல் உற்சவம் என்று அழைக்கிறார்கள்.
தூக்கத்துக்கு அழும் குழந்தைகளை தொட்டிலில் போட்டு தாலாட்டியதும், அடுத்த வினாடியே அமைதி கொண்டு குழந்தைகள் தூங்கி விடுவார்கள். அது போலதான் அங்காளம்மனை தொட்டிலில் வைத்து தாலாட்ட, தாலாட்ட அவள் மனம் அமைதி பெற்று குளிர்ந்து போகும்.
இந்த தாலாட்டு நடக்கும் போது, அங்காளம்மனை புகழ்ந்து பாடுவார்கள். இது அம்மனை மேலும் மகிழ்ச்சி கொள்ள செய்யும்.
இத்தகைய சமயத்தில் நாம் அங்காளம்மனை வழிபட வேண்டும் என்பதுதான் முக்கியம். இந்த அருளை பெறவே அமாவாசை தோறும் மேல்மலையனூர் தலம் நோக்கி லட்சக்கணக்கான பக்தர்கள் படை யெடுத்தபடி உள்ளனர்.
திருவண்ணாமலைக்கு பவுர்ணமி கிரி வலத்துக்கு வரும் பக்தர்களுக்கு இணையாக இத்தலத்துக்கும் மக்கள் லட்சக்கணக்கில் வரத் தொடங்கி உள்ளனர்.
அம்மனின் அருளை அறிந்து, அவள் பொற்பாதம் பணிந்து வரம் பெற ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பெருமளவில் வரத் தொடங்கியுள்ளனர்.
இப்படி அலை, அலையாக வரும் பக்தர்கள் எல்லோரும் அங்காளம்மனை ஊஞ்சலில் தாலாட்டுவதை எளிதில் காண்பதற்கு வசதியாக, கோவில் முன்பு உயரத்தில் ஊஞ்சல் மண்டப மேடை அமைத்துள்ளனர். அந்த மேடையில்தான் அங்காளம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடத்தப்படுகிறது.
அம்மனின் ஊஞ்சல் உற்சவத்தை கண்டு பலன் அடைந்த ஒரு பக்தர், அந்த ஊஞ்சல் மண்டப படிக்கட்டுக்களில் தங்கமுலாம் பூசி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கு தாலாட்டப்படும் அம்மனை பக்தர்கள் வந்து தரிசித்து விட்டு உடனே திரும்பி விடலாம். ஆனால் போக்குவரத்து நெரிசல் ஒன்றுதான் பக்தர்களுக்கு மிகுந்த சிரமத்தை கொடுத்து விடுகிறது.
அதுவும் திட்டமிட்டு நிவர்த்தி செய்யப்பட்டு விட்டால், அங்காளம்மனின் ஊஞ்சல் உற்சவத்தை காண நெடுந்தொலைவில் இருந்து வந்து செல்லும் பக்தர்கள் மனம் மகிழ்ந்து, அமைதி பெற்று செல்வார்கள்.
அங்காளம்மன் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்று, தன்னை நாடி வரும் பக்தர்கள் அனைவருக்கும் அந்த அமைதியை கொடுத்துக் கொண்டிருக்கிறாள் என்பது நிதர்சனமான உண்மையாகும்.