மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா இன்று தொடக்கம்
- 26-ந்தேதி காலை 6 மணிக்கு திருக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.
- 28-ந்தேதி இரவு 7 மணிக்கு பரிவேட்டை, இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடக்கின்றன.
கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் உள்ள வனபத்ர காளியம்மன் கோவில்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று குண்டம் இறங்குவார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக குண்டம் திருவிழா நடைபெறவில்லை.
இந்தநிலையில் இந்த ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த செவ்வாய்க்கிழமை குண்டம் இறங்கும் இடத்தில் கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. குண்டம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இன்று 19-ந்தேதி இரவு 7 மணிக்கு பூச்சாட்டுடன் குண்டம் விழா தொடங்குகிறது. 22-ந்தேதி காலை 10 மணிக்கு லட்சார்ச்சனையும், 23-ந்தேதி இரவு 10 மணிக்கு கிராம சாந்தி நிகழ்ச்சியும் நடக்கிறது.
24-ந்தேதி காலை 10 மணிக்கு கொடியேற்றம், சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. 25-ந்தேதி மாலை 5 மணிக்கு பொங்கல் வைத்து திருக்குண்டம் திறத்தல் நடக்கிறது. தொடர்ந்து 26-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு அம்மன் அழைப்பு, காலை 6 மணிக்கு திருக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. 27-ந்தேதி காலை 10 மணிக்கு முதல் மாவிளக்கு பூஜை நடக்கிறது. மாலை 6 மணிக்கு பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.
28-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு ஆடி அமாவாசை பூஜைகள், இரவு 7 மணிக்கு பரிவேட்டை, இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
29-ந்தேதி பகல் 12 மணிக்கு மகா அபிஷேகம், மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராடுதல், ஆகஸ்டு 1-ந்தேதி காலை 10 மணிக்கு 108 குத்துவிளக்கு பூஜை, 2-ந்தேதி மறுபூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வசந்தா, உதவி ஆணையர் கைலாசமூர்த்தி ஆகியோர் செய்து வருகிறார்கள்.