முக்தியை அருளும் முக்திநாத் திருத்தலம்!
- வைணவ சமயத்தில் 108 திவ்ய தேசங்கள் உண்டு.
- 106 திவ்ய தேசங்கள் பூமியில் உள்ளன.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவில்களை 'திவ்ய தேசங்கள்' என்று அழைப்பார்கள். அந்த திவ்ய தேசங்களில் ஒன்றுதான், நேபாளத்தில் உள்ள 'முக்திநாத்'.
உண்மையில் முக்திநாத் என்பது ஒரு சிறிய கிராமம் தான். அங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தை சுற்றி சாலமரங்கள் நிறைந்து காணப்பட்டதால், இந்த ஆலயம் 'சாளக்கிராம ஷேத்திரம்' என்று அழைக்கப்படுகிறது.
இமயமலைச் சாரலில் மிக அதிகமான உயரத்தில் இருக்கும் ஆலயம் இது. இங்கே அருளும் நாராயணர், சுயம்பு மூர்த்தியாக உருவானவர் ஆவார்.
நேபாளத்தின் தலைநகரான காட்மாண்டில் இருந்து 250 கிலோமீட்டர் தூரத்தில் முக்திநாத் ஷேத்திரம் அமைந்துள்ளது.
இந்த திவ்யதேசத்தை திருமங்கையாழ்வாரும், பெரியாழ்வாரும் 12 பாடல்களால், மங்களாசாசனம் செய்துள்ளனர். முக்திநாத் கிராமத்தில் உள்ளவர்கள் இந்த கோவிலை 'முக்தி நாராயண ஷேத்திரம்' என்று அழைக்கிறார்கள்.
இதற்கு மேல் 105 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, தாமோதர குண்ட் (நீர்த்தேக்கம்). இதைத்தான் உள்ளூர் மக்கள் 'முக்திநாதர் ஆலயம்' என்கிறார்கள்.
முக்திநாத் கோவில் பல அற்புதங்கள் நிறைந்தது. இங்கே சிறிய சன்னிதி, நேபாள பாணியில் கட்டப்பட்டுள்ளது. கோவிலில் சிறிய யாகசாலையும் உண்டு. கோவிலின் உட்புறம் முக்தி நாராயணர், ஸ்ரீதேவி - பூதேவியுடன் அமர்ந்த திருக்கோலத்தில் மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார்.
மிகப்பழமையான நூல்களில், இந்த ஆலய இறைவன் நின்ற கோலத்தில் வடக்கு நோக்கி சேவை சாதிப்பதாகவே சொல்லப்பட்டுள்ளது. திருமங்கை ஆழ்வார் தனது பாசுரத்தில் கூட இதை உறுதி செய்கிறார். கால மாற்றத்தில்தான், இறைவன் அமர்ந்த கோல தோற்றத்திற்கு மாறியிருக்க வேண்டும்.
தவிர இந்த ஆலயத்தில் கருடன், சந்தோஷமாதா, லலிதா, விநாயகர், சாளக்கிராம ரூபங்கள், பார்வதி பரமேஸ்வரன் ஆகியோரும் சிறிய விக்கிரக வடிவில் காட்சி தருகிறார்கள்.
இந்த கோவிலில் அர்ச்சனை, சிறப்பு வழிபாடுகள் என்று எதுவும் கிடையாது. சிறு மணியை பிரார்த்தனையாக கட்டும் வழக்கம் மட்டும் உள்ளது. லட்ச தீபம் ஏற்றும் வழிபாடு உண்டு. இங்குள்ள சிறிய யாகசாலையில் எப்பொழுதும் அக்னி எரிந்துகொண்டிருக்கும். அதில் நாமே ஹோமம் செய்துகொள்ளலாம்.
கருவறையில் உள்ள இறைவனுக்கு நம் ஊரில் நடப்பது போல அபிஷேகம் செய்வது கிடையாது. செப்பு தட்டில் ஐந்து கிண்ணங்கள் இருக்கும். அதில் சந்தனம், குங்குமம், ஜவ்வாது போன்றவை இருக்கும். அவற்றை ஒரு துணியில் தொட்டு, முக்திநாதரை துடைப்பார்கள். அதுதான் அங்கே அபிஷேகம் ஆகும்.
இந்த ஆலயத்தில் 108 தீர்த்தங்கள் செயற்கையாக அமைக்கப்பட்டுள்ளன. ஒரு தொட்டியில் தனித்தனி குழாய் வைத்து இந்த தீர்த்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர, பாவ புண்ணிய தீர்த்தங்கள் என்று இரண்டு தீர்த்தங்கள் உள்ளன.
மேற்கண்ட அனைத்து தீர்த்தங்களிலும் நவம்பர் முதல் மார்ச் வரையான மாதங்களில் கடுமையான குளிர் காரணமாக நீராட சிரமமாக இருக்கும்.
பனி சூழ்ந்த உயரமான மலையில் அமைந்துள்ள இந்த ஆலயம், அற்புதமான அனுபவங்களை கட்டாயம் கொடுக்கும். வாழ்க்கையில் ஒரு முறை நிச்சயம் தரிசிக்க வேண்டிய ஆலயம் இதுவாகும்.
இந்த ஆலயத்திற்கு சென்று திரும்புபவர்கள், காட்மாண்டு சென்று அங்கும் பல ஆலயங்களை தரிசிக்கலாம். மேலும் இங்கு சாளக்கிராமம் வாங்கிக்கொண்டு வந்து நம் இல்லத்தில் வைத்து பூஜிப்பது மிகுந்த புண்ணியத்தைத் தரும்.
சாளக்கிராம அபிஷேக தீர்த்தமானது, கங்கை நீருக்கு சமம் என்பார்கள். மேலும் சாளக்கிராமத்தை துளசி கொண்டு பூஜிப்பவர்களின் இல்லங்களில் நரக பயம் இருக்காது.
செல்லும் வழி
சென்னையில் இருந்து ரெயில் மூலம் அல்லது விமானத்தின் மூலம் கோரக்பூர் சென்று, கோரக்பூரில் இருந்து டாக்சி மூலம் சுனோலி எல்லையை அடைய வேண்டும். சுனோலி எல்லையை ஐந்து நிமிடம் நடந்து கடக்கலாம். அந்த இடத்திற்கு 'பைரவா' என்று பெயர்.
அங்கிருந்து விமானத்தின் மூலம் அல்லது பஸ் அல்லது வேறு வாகனத்தின் மூலமும் போக்ரா என்ற இடத்தை அடையலாம். போக்ராவில் ஒரு நாள் தங்க வேண்டியதிருக்கும். போக்ராவில் இருந்து முக்திநாத் செல்ல அனுமதி வாங்க வேண்டும்.
போக்ராவில் இருந்து ஜேம்சன் என்ற இடத்திற்குச் சென்று அங்கிருந்து முக்திநாத் செல்ல வேண்டும். முக்திநாத்தில் இருந்து கோவிலை அடைய நடந்து அல்லது குதிரையில் செல்ல வேண்டும்.
108 திவ்ய தேசங்கள்
வைணவ சமயத்தில் 108 திவ்ய தேசங்கள் உண்டு. அவற்றில் 106 திவ்ய தேசங்கள் பூமியில் உள்ளன. 'திருப்பாற்கடல்', 'வைகுண்டம்' ஆகிய இரண்டு திவ்ய தேசங்களை தரிசிக்கும் பாக்கியம் வானுலகில்தான் வாய்க்கும்.
பூமியில் உள்ள 106 திவ்ய தேசங்களில் 105 இந்தியாவிலும், நேபாளத்தில் ஒன்றும் அமைந்துள்ளன. நேபாளத்தில் அமைந்த திவ்ய தேசம்தான் 'முக்திநாத்' ஆகும்.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவில்களின் தொகுப்பே '108 திவ்ய தேசங்கள்'. மங்களாசாசனம் என்பது, திருமாலையும் அவர் இருந்து ஆட்சி செய்யும் தலங்களையும் பாடிய பாடல்களை குறிக்கும்.
108 திவ்ய தேசங்களையும் தொகுத்துக் காட்டியவர், அழகிய மணவாளதாசர் என்பவர் ஆவார். இவர் திருமலை நாயக்கர் ஆட்சியில், அலுவலராகப் பணியாற்றியவர். 108 ஆலயங்களையும், நாடு வாரியாகப் பிரித்து, ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வெண்பா பாடியுள்ளார். அவை 'நூற்றெட்டு திருப்பதி அந்தாதி' என்று அழைக்கப்படுகிறது.