வழிபாடு

முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் எப்போது?: பக்தர்கள் எதிர்பார்ப்பு

Published On 2022-12-27 07:05 GMT   |   Update On 2022-12-27 07:05 GMT
  • 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
  • தினமும் பல இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

ஆரல்வாய்மொழி அருகே உள்ள முப்பந்தலில் மக்களின் குறைதீர்த்து அருள்பாலித்து வரும் இசக்கியம்மன் (கிழக்கு) கோவில் உள்ளது. மூவேந்தர்கள் தங்களுக்குள் இருந்த வேற்றுமையை ஒற்றுமையாக்க தமிழ் மூதாட்டியான அவ்வை மன்னர்களை அழைத்து ஒரே இடத்தில் மூன்று பந்தல் அமைத்து அவர்களுக்குள் இருந்த வேற்றுமையை அகற்றி ஒரு சேர விருந்துண்ண வைத்து அளவளாவிய மகிழ்ச்சி பெற்ற சிறப்பு தலமே முப்பந்தல் ஆகும். அவ்வையின் வேண்டுகோளை ஏற்று பராசக்தியின் மறு உருவான இசக்கி என்ற இசக்கியம்மனை இங்கு அமர வைத்து கோவில் கொண்டதால் முப்பந்தல் சிறந்த புண்ணிய தலமானதாக கூறப்படுகிறது.

இங்கு வந்து அம்மனை வழிபட்டால் தடைபட்டு வரும் திருமணம் நடக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும், பகைமை விலகும், தீராத பிணி தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே இக்கோவிலுக்கு அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து வந்தும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்கிறார்கள்.

இந்த கோவிலில் தினசரி பூஜைகள் நடைபெறும். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுகிழமைகளில் சிறப்பு பூஜையும், தினந்தோறும் பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெறுகிறது. ஆடி மாத கொடை விழா இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாவில் ஒன்று. ஆரம்பத்தில் ஓட்டு கட்டிடத்தில் இருந்த இக்கோவில் கடந்த 2006-ம் ஆண்டு திருப்பணிகள் நடைபெற்று பெரிய அளவிலான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது மீண்டும் அடுத்த கும்பாபிஷேகம் எப்போது? என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே அதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து பக்தர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

நாகர்கோவில் வடசேரி தேவி சுப்பிரமணியம்:-

நான் 30 ஆண்டுகளாக கோவில் திருவிளக்கு பூஜை மகளிர் குழு தலைவராக உள்ளேன். தமிழ் மாத கடைசி செவ்வாய்க்கிழமை திருவிளக்கு பூஜை நடப்பது வழக்கம். இந்த திருவிளக்கு பூஜை கொரோனாவிற்கு பிறகு தடைபட்டு விட்டது. அது தொடர்ந்து நடைபெற திருக்கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 15 ஆண்டுகள் ஆகிறது. எனவே விரைவில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

கோவிலுக்கு வரும் பக்தர்களின் செருப்புகளை பாதுகாக்கும் வசதியும், வெளியூர் பக்தர்களுக்காக தங்கும் வசதியும் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்னதானம் பெற வரிசையில் நிற்பவர்களுக்கு வெயில், மழை படாமல் இருக்க அப்பகுதியில் மேற்கூரை அமைக்க வேண்டும்.

ஆரல்வாய்மொழி முருகேசன்:-

நான் 20 ஆண்டுகளுக்கு மேலாக கோவில் அருகே ஓட்டல் நடத்தி வருகிறேன். கோவிலுக்கு தினமும் பல இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதிலும் செவ்வாய், வெள்ளிகிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது பக்தர்களின் எண்ணம்.

இதற்கிடையே கோவிலில் இதுதொடர்பாக வந்து அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இதனால் விரைவில் கும்பாபிஷேகம் நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு தங்குவதற்கு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுத்தால் கோவிலுக்கு இன்னும் கூட்டம் அதிகமாக வரும். பூஜை நேரங்களில் கூட்டம் கோவில் முன்பு நிற்பதால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகாரி விளக்கம்

கோவில் செயல் அலுவலர் பொன்னி கூறுகையில், "இந்த கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு திருப்பணிகள் முடிவடைந்து மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது தமிழக அரசின் உத்தரவுபடி கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் முடிந்த கோவில்களுக்கு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இக்கோவிலின் கும்பாபிஷேகத்திற்கான ஆயத்த பணிகள் நடந்துள்ளன. திருப்பணிகள் தொடர்பான மண்டல ஆய்வு குழு, மாநில ஆய்வு குழு களின் அனுமதி பெறப்பட்டுள்ளது. மேலும் கும்பாபிஷேக திருப்பணிக்கான மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் அனுமதி பெற்றவுடன் கும்பாபிஷேகம் நடைபெறும்" என்றார்.

Tags:    

Similar News