- சிவலிங்கத்தை மீட்டு கேதாரீஸ்வரர் என்ற கோவிலை அமைத்தார்.
- 44 நாட்கள் தொடர்ச்சியாக விரதம் இருந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் என்ற ஊரில் வேளாளர் குடியில் சுமார் 400 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்கள், சண்முக சிகாமணி - சிவகாமசுந்தரி தம்பதியர். இவர்களுக்கு நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லை. அவர்கள் தொடர்ந்து முருகப்பெருமானை பூஜித்து வந்தனர்.
இதையடுத்து முருகன் அருளால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அகமகிழ்ந்த அந்த தம்பதியர், தங்களின் பிள்ளைக்கு 'குமர குருபரன்' என்று பெயர் சூட்டினர்.
அந்த தம்பதியின் மகிழ்ச்சி வெகு நாட்கள் நீடிக்கவில்லை. குழந்தைக்கு பேச்சுவரவில்லை என்ற கவலை அவர்களை வாட்டியது. இதனால் அவர்கள் மீண்டும் முருகனின் பாதத்தையே தஞ்சமடைந்தனர்.
திருச்செந்தூர் திருத்தலம் சென்று விரதம் இருந்தனர். 44 நாட்கள் தொடர்ச்சியாக விரதம் இருந்தனர். 44-வது நாளில் முருகப்பெருமானே, அர்ச்சகர் வடிவில் வந்து குழந்தையின் நாக்கில் சடாட்ஷரம் (சரவணபவ) எழுதி, "நாளை காலை விஸ்வரூப தரிசனத்தில் என்னை வந்து தரிசனம் செய்" என உத்தரவிட்டார்.
சிறு பிள்ளையான குமரகுருபரன், மறுநாள் காலை தன் தாய் தந்தையரை எழுப்பி "விஸ்வரூப தரிசனத்திற்கு செல்லலாம்.. அப்பா, அம்மா வாருங்கள், வாருங்கள்" என்றான். தங்கள் பிள்ளை பேசுவதைக் கண்டு, தாயும் தந்தையும் அகமகிழ்ந்து போயினர்.
குமரகுருபரர், முருகன் அருளால் பல அற்புதங்களை செய்து, பின் காசி யாத்திரை சென்றார். அங்கு விஸ்வநாதரை தரிசித்தார். 'காசியில் ஒரு மடம் கட்ட வேண்டும்' என எண்ணினார். அதற்கான இடத்தை முகலாய மன்னர்களிடம் இருந்து பெற வேண்டி டெல்லி சென்றார்.
இந்துஸ்தானிய மொழி தெரியாததால் அவர்களிடம் எப்படி பேசுவது, எப்படி அனுமதி வாங்குவது என்று யோசித்தார். பின்னர் சரஸ்வதி தேவியை நோக்கி 'சகலகலாவல்லி மாலை' என்னும் பாடலை பாடி துதி செய்தார். இதனால் இந்துஸ்தானிய மொழி பேசும் ஆற்றலையும் பெற்றார். டெல்லி பாதுஷாவிடம் நேரம் ஒதுக்க இந்துஸ்தானி மொழியில் அனுமதியும் கேட்டார். பாதுஷாவும் அவருக்கு நேரம் ஒதுக்கிக் கொடுத்தார்.
ஆனால் குமரகுருபரர் அரண்மனைக்கு வந்துசேர பல்லக்கோ, வாகனமோ அனுப்பவில்லை. குமரகுருபரர் மீண்டும் முருகனை தியானிக்க, சிங்கம் ஒன்று கம்பீரத்துடன் வந்து சேர்ந்தது. அதையே வாகனம் ஆக்கி அதன் மேல் அமர்ந்து பாதுஷாவின் அரண்மனை நோக்கிச்சென்றார்.
குமரகுருபரரின் மகிமை அறிந்த சுல்தான், 'தங்களுக்கு என்ன வேண்டும்' என்று கேட்க, 'காசியில் கேதாரி காட் பகுதியில் ஒரு இடம் வேண்டும்' என்று கேட்டார், குமரகுருபரர். அதன்படியே சுல்தான் வழங்கிய இடத்தில் ஒரு மடத்தை நிறுவினார்.
அதன் அருகில் புதைந்து கிடந்த ஒரு பழமையான சிவலிங்கத்தை மீட்டு கேதாரீஸ்வரர் என்ற கோவிலை அமைத்தார். இவர் 'கந்தர் கலிவெண்பா', 'மீனாட்சி பிள்ளைத்தமிழ்', 'மதுரை கலம் பகம்', 'நீதி நெறி விளக்கம்' போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.