சித்தர்களுக்கெல்லாம் சித்தன் 'சித்தநாதன்'
- சித்தர்கள் வழி சென்றால் இறைவனுடன் ஐக்கியம் ஆகலாம்.
- இறைவனுக்கே ‘எல்லாம் வல்ல சித்தர்' என்ற பெயரும் உண்டு.
உலகில் அரியதாக மனித பிறவி எடுத்த நமக்கு உண்ணவும், உரையாடவும் பழகி கொடுத்தவள் தாய். நல்வழிப்படுத்தி வழிகாட்டுபவர் தந்தை. அறிவு காட்டுபவர் ஆசான். ஆனால் வாழ்வாங்கு வாழ்ந்து இறுதியில் இறை அருளை பெற வழிகாட்டுபவர்கள் சித்தர்களே. ஆண்டவனின் கிளை சக்திகளாக திகழும் சித்தர்கள் காட்டாற்று வெள்ளம் போல் சென்ற மக்களை கரையுள்ள நதியாய் நல்வழிப்படுத்தி நற்பயனை அடைய செய்வார்கள்.
மலையில் உற்பத்தியாகும் நீர் கடலுடன் சங்கமம் ஆவதற்கு ஒழுங்குபடுத்துவது நதி. அதுபோல அறநெறிகளை வகுத்து காட்டிய நம் சித்தர்கள் வழி சென்றால் இறைவனுடன் ஐக்கியம் ஆகலாம். சீ(ஜீ)வன் சிவனாவது தான் சித்து. தம்மை தாமே அறிந்து தலைவனை அறிபவனே சித்தர். அவர்கள் சாகா கலை என்ற மருந்தை சரப்பயிற்சி மூலம் அடைந்து பேரின்பத்தில் திளைப்பவர்கள். எண்ணியதை எண்ணியாங்கு எய்தி வரும் பொருள் அறிந்து செயற்கரிய செய்பவர்கள். சித்தத்தை அடக்கி மூவாசைகளை துறந்து சுத்தமாக்கி திடநம்பிக்கையோடு இறைவன் பால் மனதை வைத்தவர்கள் சித்தர் பெருமக்கள். எனவேதான் இறைவனுக்கே 'எல்லாம் வல்ல சித்தர்' என்ற பெயரும் உண்டு.
சித்தர்கள் சாதி, சமய வேறுபாடுகளை கடந்தவர்கள், மூட நம்பிக்கைக்கு இடம் அளிக்காதவர்கள். சடங்குகளோடு ஒட்டிய வழிபாடுகளை போற்றாதவர்கள். தத்துவஞானிகள். மெய்யுணர்வு பெற்றவர்கள். பொதுவாக சித்தர்கள் நம் தமிழ்நாட்டில் பரவலாக வாழ்ந்துள்ளார்கள் என்பது உண்மை. இதில் குறிப்பாக பழனி மலைப்பகுதி, பொதிகை, கொல்லிமலை, திருவண்ணாமலை ஆகியவை சிறப்பிடம் பெற்றவையாக உள்ளது. சித்தர்கள் தங்கள் குருவாக முருகப்பெருமானை ஏற்று வணங்கியவர்கள். அதிலும் பழனியாண்டவன் சித்தனாக, ஞானகுருவாக, குருமூர்த்தியாக எழுந்தருளி உள்ளான். எனவே தான் முருகப்பெருமானை சித்தர்களுக்கெல்லாம் சித்தன் என்றும், சித்தநாதன் என்றும் ஆன்மிக பெரியோர்கள் போற்றி வணங்குகின்றனர்.