பாலசுப்பிரமணியர் கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா
- முத்தாரம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
- பாலசுப்பிரமணியர் கோலத்தில் அம்மன் திருவீதி உலா.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் 4-ம் நாள் நிகழ்ச்சியில் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் கோலத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நடந்து வருகிறது. இவ்விழாவை முன்னிட்டு விரதம் மேற்கொண்டுள்ள பக்தர்கள் பத்திரகாளி, கருப்பசாமி உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவிலில் தினமும் முத்தாரம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
நான்காம் திருநாளான நேற்று முன்தினம் இரவு மயில்வாகனத்தில் பாலசுப்பிரமணியர் கோலத்தில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டிருந்து அம்மனை வழிபட்டனர். இந்த கோலத்தில் அம்மனை தரிசித்தால் பக்தர்களுக்கு எல்லாநலமும்கிடைக்கும் என்பது ஐதீகம். ஐந்தாம் நாளான நேற்று காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை சமய சொற்பொழிவு, ஆன்மிக சொற்பொழிவு, வில்லிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.