வழிபாடு

நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரம்

Published On 2024-03-04 04:55 GMT   |   Update On 2024-03-04 04:55 GMT
  • வேறு எந்த தெய்வத்தைக் காட்டிலும் சிவனை வழிபடுதல் எளியது.
  • சிவ நாமத்தை உச்சாரணம் செய்யும் அந்த கணமே பாபங்கள் எல்லாம் போய்விடும்.

நமசிவாய என்பது ஐந்தெழுத்து மந்திரம். பஞ்சாட்சர மந்திரத்தைப்பற்றி கூறுங்கால் வித்தைகளில் சுருதியும் அதைவிட ஸ்ரீ ருத்ரமும் அதைவிட பஞ்சாட்சரமும் சிறந்தது என ஆகமங்கள் கூறுகின்றன. இந்த பஞ்சாட்சர மந்திரம் யஜுர் வேத சம்ஹிதையின் இருதயபீடமாக அமைந்து விளங்குகிறது.

எல்லாப் பாவங்களையும் போக்கவல்ல சிவ என்ற இரண்டெழுத்துக்களைக் கொண்டது இந்த ஐந்தெழுத்து மந்திரம். இம்மந்திரத்தை தேவதையின் சரீரமென்று சொல்வதால் இதில் உள்ள ஒவ்வொரு அட்சரமும் சிவனுடைய ரூபமாகக் கொள்ளலாம். வேறு எந்த தெய்வத்தைக் காட்டிலும் சிவனை வழிபடுதல் எளியது. அவருக்கு பூஜைக்குரிய பொருள்களோ எளிதில் கிடைக்கும்.

எருக்கம்பூ, தும்பைப்பூ என்ற இலைகளால் பூஜித்தாலும் சாந்தம் அடைகிறார் சிவபெருமான். எவ்வொருவனுக்கு வாக்கு சுத்தம் வேண்டுமோ, எவனொருவனுக்கு மனத்தூய்மை வேண்டுமோ அவர்கள் நமசிவாய என சிவ நாமத்தை சொல்லி எளிதில் அதைப் பெற்று விடலாம்.

நமச்சிவாய என்று சொல்லக்கூட இக்காலத்தில் மக்களுக்கு முடியாவிட்டால் சிவ சிவ என்று பக்திபூர்வமாகச் சொன்னாலே போதும். இதை சொல்வதற்கு எந்த குறிப்பிட்ட காலவரையும் கிடையாது. சிவ நாமத்தை உச்சாரணம் செய்யும் அந்த கணமே பாபங்கள் எல்லாம் போய்விடும்.

சிவபெருமானை பற்றி மார்க்கண்டேயர் கூறுகையில், சந்திரனைத் தனது தலையில் அணிந்துள்ள சிவபிரானை உறுதுணையாக கொண்ட என்னை எமன் என்ன செய்வான் என்று குறிப்பிடுகிறார்.

சிவபெருமானின் அரிய பல செயல்கள் பல உண்டு என்றாலும் ஆலாலம் என்ற கொடிய நஞ்சை தேவர்களை காத்தருள வேண்டுமென்பதற்காக ஈசன் உண்டதுதான் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதில் இருந்து அவருக்கு நீலகண்டன் என பெயர் வந்தது.

எனவே எச்சமயத்திலும் நமக்கு அருள்புரிய காத்திருக்கும் சிவபெருமானை பக்தியுடன் தியானம் செய்து வழிபட வேண்டும். அதோடு ஆலயங்களுக்கு நேரில் சென்று அல்லது தரிசனம் செய்தோ அவசியம் வழிபட வேண்டும்.

நாம சங்கீர்த்தனம் செய்தோ அல்லது துதி செய்தோ வந்தாலும் சகல பாபங்களும் பஸ்பமாக்கப் படுகின்றன என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே வருகிற 8-ந் தேதி சிவராத்திரி தினத்திலாவது மேற்குறிப்பிட்டவைகளில் ஏதேனும் ஒன்றின்மூலம் சிவனை வழிபட்டு நற்கதி அடைவோமாக.

Tags:    

Similar News