வழிபாடு

தங்க கும்ப கலசத்தின் குமிழ் பகுதி சாய்ந்த நிலையில் இருப்பது வட்டமிட்டு காட்டப்பட்டு உள்ளது.

திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவிலில் தங்க கும்ப கலச குமிழ் சாய்ந்தது: பக்தர்கள் அதிர்ச்சி

Published On 2023-06-22 04:31 GMT   |   Update On 2023-06-22 04:31 GMT
  • சாய்ந்துள்ள கும்ப கலசகுமிழை சீரமைத்து பரிகார பூஜை நடத்த வேண்டும்.
  • இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த போது கும்ப கலசம் புதுப்பித்து வைக்கப்பட்டது.

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலய திருத்தலங்களில் 4-வது சிவாலயமாக திருநந்திக்கரை நந்தீஸ்வரர் ேகாவில் உள்ளது. இந்த கோவில் அமைப்பும் பல்வேறு கட்டிடக்கலை சிறப்புகள் கொண்டதாகும். இக்கோவிலில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தங்க கும்ப கலசம் உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த போது கும்ப கலசம் புதுப்பித்து வைக்கப்பட்டது.

இக்கோவிலில் உள்ள தங்க கும்ப கலசத்தின் உச்சியில் கூம்பு வடிவத்திலான குமிழ் சாய்ந்த நிலையில் இருப்பதை கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கு வந்த பக்தர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இந்த செய்தி வேகமாக பக்தர்கள் மத்தியில் பரவியது. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாய்ந்த நிலையில் காணப்படும் கும்பகலச குமிழைப் பார்த்து வேதனையில் செல்கின்றனர். கோவிலில் நாள் தவறாது பூஜைகள் நடைபெறும் நிலையில் கும்ப கலச குமிழ் எவ்வாறு சாய்ந்தது என பக்தர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் கும்பகலசத்தின் உள்ளே உறுதியான இருப்பு கம்பி இணைப்பு உள்ள நிலையில் இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது என்பதும் கேள்வியாக உள்ளது.

இது குறித்து பக்தர் ஒருவர் கூறுகையில், எளிதில் சாய்வதற்கு வாய்ப்பில்லாத கோவிலின் கும்ப கலச குமிழ் சாய்ந்த நிலையில் கிடக்கிறது. இதனால் நாங்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளோம். எனவே இது தொடர்பாக தேவசம் போர்டு அதிகாரிகள் முழு விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். மேலும் சாய்ந்துள்ள கும்ப கலசகுமிழை சீரமைத்து பரிகார பூஜை நடத்த வேண்டும் என்றார்.

இது தொடர்பாக தேவசம் போர்டு அலுவலர், ஒருவரிடம் கேட்ட போது கும்ப கலச குமிழ் சாய்ந்து கிடப்பது தொடர்பாக கோவில் வளாகத்திலுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருவதாகவும். உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Similar News