நாராயணவனம், அப்பலாயகுண்டா கல்யாண, பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவில்களில் தேரோட்டம்
- உற்சவர்களுக்கு நறுமண திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது.
- தேருக்கு முன்னால் சிறுமிகள் கோலாட்டம் ஆடினர்.
திருப்பதி மாவட்டம் நாராயணவனம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. தேரில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்து அருள்பாலித்தனர்.
அதைத்தொடர்ந்து மதியம் உற்சவர்களுக்கு நறுமண திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. இரவு குதிரை வாகனத்தில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் எழுந்தருளி வீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதேபோல் அப்பலாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. தேரில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தேருக்கு முன்னால் சிறுமிகள் கோலாட்டம் ஆடினர். மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.
தேரோட்டம் முடிந்ததும் உற்சவர்களுக்கு சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. இரவு குதிரை வாகனத்தில் உற்சவர் பிரசன்ன வெங்கடேஸ்வரர் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.