வழிபாடு

கோவிலில் உள்ள மகாமண்டபம்.

பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவில் கும்பாபிஷேகம் எப்போது?: பக்தர்கள் எதிர்பார்ப்பு

Published On 2022-11-24 06:48 GMT   |   Update On 2022-11-24 06:48 GMT
  • சுற்றுலா நகரமான பத்மநாபபுரம் ஒரு ஆன்மிக நகரமாகவும் விளங்குகிறது.
  • இந்த கோவிலில் 1577-ம் ஆண்டு கோவிலில் கும்பாபிஷேகம் நடந்ததாக தெரிகிறது.

குமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் கல்குளம் நீலகண்டசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்று சிறப்புமிக்க 12 சிவாலயங்களில் 7-வது தலமாக கருதப்படுகிறது. சுற்றுலா நகரமான பத்மநாபபுரம் ஒரு ஆன்மிக நகரமாகவும் விளங்குகிறது. பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து ஆட்சி புரிந்த மன்னர்கள் இறைவனை தரிசிப்பதற்காக அரண்மனையை சுற்றிலும் பல கோவில்களை கட்டியுள்ளனர். அதில் ஒன்று தான் நீலகண்டசாமி கோவில்.

வானுயர்ந்த ராஜகோபுரம், அழகான தெப்பக்குளம், சிற்பங்கள் நிறைந்த மகாமண்டபம் என கலை அம்சத்துடன் காணப்படும் இந்த கோவில் வேணாட்டு மன்னரான உதய மார்த்தாண்டன் காலத்தில் கட்டப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. ஆனால் கோவில் எப்போது கட்டப்பட்டது என்பது சரிவர தெரியவில்லை.

கும்பாபிஷேகம் எப்போது?

இந்த கோவிலில் 1577-ம் ஆண்டு கோவிலில் கும்பாபிஷேகம் நடந்ததாக தெரிகிறது. மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவில் ஆனந்தவல்லி அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்ட காலத்தில் இருந்து கணக்கிட்டால் சுமார் 281 ஆண்டுகள் ஆகிறது. கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஐதீகம். ஆனால் இந்த கோவிலில் இந்த நடைமுறை கடைப்பிடிக்கவில்லை. எனவே இங்கு விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பக்தர்கள் வேதனை

இதுகுறித்து பக்தர்கள் சேவா சங்க துணைத்தலைவர் ரவீந்திரன் நாயர் கூறியதாவது:-

நீலகண்டசாமி கோவிலில் எனக்கு தெரிந்தவரை கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. இது பக்தர்களுக்கு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. 12 வருடத்திற்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தவில்லை என்றால் கோவில் அமைந்துள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் கஷ்டம் ஏற்படும் என்பதால் பக்தர்கள் சங்கம் சார்பில் அரசாங்கத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில் அறநிலையத்துறை மூலம் கடந்த 2008-ம் ஆண்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டது. அதுவும் பக்தர்கள் முயற்சியால் நன்கொடை திரட்டப்பட்டு பணிகள் நடந்தன.

ஆனால் கோவில் கொடிமரத்தை மாற்றி புதிய கொடிமரம் அமைக்க அறநிலையத்துறை காலம் கடத்தி வந்ததால் அப்போதும் கும்பாபிஷேகம் நடத்தவில்லை.

இந்தநிலையில் தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுத்தது. இதற்காக திட்ட மதிப்பீடு தயார் செய்வதற்காக அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். பின்னர் துறை அமைச்சர் சேகர்பாபுவும் ஆய்வு செய்த பிறகு விரைவில் திருப்பணிகள் தொடங்கி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றார்.

மேலும், கோவிலில் பல பகுதிகள் சேதமாகி காணப்படுகிறது. கொடிமரம் வடக்கு பக்கமாக சாய்ந்துள்ளது. இதனை மாற்றி புதிய கொடிமரம் அமைக்க வேண்டும். தில்லை நடராஜர் சன்னதியில் சாமி சிலையை காணவில்லை. இதனால் கோவில் பூட்டியே காணப்படுகிறது. இப்படி ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. எனவே இதனை நிவர்த்தி செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பதே அனைத்து பக்தர்களின் விருப்பமாக உள்ளது. இனியும் காலதாமதம் செய்தால் கோவில் முன்பு உண்ணாவிரதம் இருப்பேன்.

குளத்தை தூர்வார வேண்டும்

பக்தர்கள் சேவா சங்க செயலாளர் பி.கோபகுமார் கூறியதாவது:-

கோவிலில் தெப்பக்குளம் நீண்ட காலம் தூர்வாரப்படாமல் உள்ளது. குளத்தின் கரைகள் உடைந்தும், கழிவுநீர் கலந்தும் மிகவும் பரிதாபமாக காட்சியளிக்கிறது. இதுபோல் குளத்தின் கரையில் கோவிலின் முன்புறமுள்ள நாகர் பீடம் சேதமடைந்துள்ளது. இதனால் பக்தர்கள் பீடத்தை வலம் வர முடியாத நிலை காணப்படுகிறது. மேலும் திருவிழாவின் போது சாமி பவனியில் கொண்டு செல்லப்படும் வாகனங்கள் உடைந்து காணப்படுகிறது.

மன்னர்கள் ஆட்சியின் போது கட்டப்பட்ட கோவில்களில் உள்ள சுவாமி விக்கிரகங்களுக்கு திருவிழாவின் போது அணிவிக்கக்கூடிய தங்க ஆபரணங்களை பாதுகாக்கும் கருவூலம் இந்த கோவிலின் உள்ளே காணப்படுகிறது. பாதுகாப்பு அம்சங்களோடு அமைக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பிற்கு இங்கு பணியாளர்கள் இல்லை. மேலும் கோவிலில் உள்ள சாமிகளுக்கு அத்தாள பூஜைக்கு பிறகு நடத்தப்படும் பள்ளியறை பூஜை நடப்பதில்லை. இப்படி ஆகம சடங்குகள் இல்லாமலும், வளர்ச்சி பணிகள் எதுவும் செய்யாமலும் காணப்படும் இந்த கோவிலில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து திருப்பணிகள் மேற்கொண்டு விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அடுத்தமாதம் திருப்பணிகள் தொடங்கும்

குமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் ஞானசேகர் பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவில் திருப்பணிகள் குறித்து கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டு பழமையான கோவில்களில் ஒன்றான பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த கோவிலில் ரூ.2.42 கோடி செலவில் கும்பாபிஷேகம் நடத்த திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு பெற்றதும் டெண்டர் விட்டு திருப்பணிகள் தொடங்கப்படும். ரூ.2.42 கோடியில் நடைபெற உள்ள திருப்பணிகளில் நவீனடைல்ஸ்களை மாற்றி கருங்கல் தளம் அமைத்தல், மண்டபம் தட்டோடு பதித்து ஒழுக்கு மாற்றும் வேலை செய்தல், கோவில் மண்டபம் புகைபோக்கி பழுது பார்த்தல், வடக்கு வாசல் மண்டபம் பழுதுபார்த்து பராமரிப்பு வேலை செய்தல், மடப்பள்ளி பழுதுபார்த்தல் மற்றும் கதவு ஜன்னல்கள் பழுதுபார்த்தல், கழிவுநீர் ஓடை சரி செய்தல், கோபுர திருப்பணி மேற்கொள்ளுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். பணிகள் முடிந்ததும் அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலைநயத்துடன் சிற்பங்கள்

இந்த கோவிலின் கிழக்கு பிரகாரத்தை சித்திரசபை என கல்வெட்டு குறிப்பிடும். உண்மையில் இது சிற்பக்கூடமே. இங்கே கலைநுட்பமுடைய சிற்பங்கள் உள்ளன. இம் மண்டப வடக்குப்பகுதி தூண்களில் கர்ணன், கங்காளநாதர், வேணுகோபாலன், அர்ஜூனன் தபசு சிற்பங்களாக காட்சி அளிக்கிறது. ஆளுயர கருங்கல் சிற்பங்கள், கர்ணனின் 2 கைகளில் சர்பமும், வில்லும் உள்ளன. கங்காளநாதர் அருகே சட்டி ஏந்திய குள்ளப்பூதம் உள்ளது. கங்காளரின் வலது கை மானுக்கு புல்கொடுப்பது போல் காட்டப்பட்டுள்ளது. மான் துள்ளி நிற்கும் வகையில் உள்ளது.

வேணுகோபாலன் 4 கைகள் உடையவர். இரு முன் கைகள் புல்லாங்குழலை பிடித்துள்ளன. இந்த இசைக்கருவி வேணுகோபாலனின் உதட்டின் கீழ் உள்ளவாறு காட்சி அளிக்கிறது. திருமலை நாயக்கர் சிற்பத்தின் அருகே உள்ள விளக்கேந்திய பாவை பலவகை ஆபரணங்களை அணிந்திருக்கிறாள். இவள் தலைமுடியை பின்னிப் போட்டிருப்பது நுட்பமாக காட்டப்பட்டுள்ளது.

இந்த மண்டப கிழக்கு பக்கத் தூணில் தலையிலும், கையிலும் பலாப்பழத்தை சுமந்து கொண்டு பெண்ணொருத்தி நிற்கும் காட்சியும் வேறு சிற்பக் காட்சிகளும் உள்ளன. அம்மன் கோவிலின் முன்பகுதி மண்டபத்தில் ஒப்பனை பெண், வில்லுடன் ராமர், இளவரசியை கவர்ந்து செல்லும் குறவர் என பல சிற்பங்கள். இங்குள்ள முன் மண்டபத்தூணில் மானை சுமந்து செல்லும் வேடனின் சிற்பம், சிவன் என சில சிற்பங்கள் கலைநயத்துடன் கண்ணை கவரும் வகையில் உள்ளன.

பத்மநாபபுரம் கோவில் மற்றும் ஊரில் 15 கல்வெட்டுகள் உள்ளன. இவை தமிழ் மற்றும் வட்டெழுத்து வடிவில் அமைந்தவை. இக்கோவிலில் 5 கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றின் வழி கோவில் கட்டுமானத்தை ஓரளவு கணிக்க முடிகிறது.

வீர கேரள வர்மன் என்னும் வேணாட்டு மன்னனின் கி.பி.1237-ம் ஆண்டு கல்வெட்டு இக்கோவிலுக்கு இரணிய சிங்கநல்லூரில் நிலம் கொடுத்தது தெரிகிறது.

Tags:    

Similar News