பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா
- திருஞானசம்பந்தருக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது.
- திருஞானசம்பந்தர், சிவபெருமான்-பார்வதிக்கு தீபாரதனை நடைபெற்றது.
சைவ சமய குரவர்களில் நால்வரில் ஒருவரும் திருநீற்றின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவருமான திருஞான சம்பந்தர் வைகாசி மாதம் மூல நட்சத்திர நாளான்று அவதரித்தார். அவருக்கு சிவபெருமானும், உமாதேவியும் ஞானப்பால் ஊட்டியதால் அவர் தேவாரம் பாடினார். அந்த தினத்தை திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு சித்தனாதன் விபூதி நிறுவனத்தின் சார்பில் பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ஞானப்பால் ஊட்டும் விழா நடந்தது.
விழாவில் காலை 9 மணிக்கு முத்துக்குமாரசுவாமி மண்டபத்தில் திருஞானசம்பந்தருக்கு 16 வகை அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் மற்றும் தீபாரதனையும் நடைபெற்றது. பின்னர் ஓதுவார்கள் தேவாரப் பாடல்களை பாடினர். தொடர்ந்து சப்பரத்தில் திருஞானசம்பந்தர் எழுந்தருளினார். சிவபெருமான், உமா தேவியுடன் நந்தி வாகனத்தில் எழுந்தருளி பெரியநாயகி அம்மன் கோவில் உட்பிரகாரத்தில் உலா வந்தனர். கோவிலில் விநாயகர் சன்னதி முன்பு திருஞானசம்பந்தருக்கு கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் பொற்கிண்ணத்தில் ஞானப்பாலை ஊட்டினார்.
பின்னர் திருஞானசம்பந்தர், சிவபெருமான்-பார்வதிக்கு தீபாரதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு ஞானப்பால் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி உபயதாரர்களான சித்தனாதன் சன்ஸ் உரிமையாளர்கள் சிவனேசன், தனசேகர், பழனிவேலு, ராகவன், அசோக், செந்தில், கார்த்திகேயன், குமரகுரு மற்றும் குடும்பத்தினர், கொங்கு வேளாளர் சங்க பிரமுகர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். பூஜை முறைகளை கோவில் குருக்கள் செல்வ சுப்பிரமணி மற்றும் குருக்கள் செய்தனர்.