வழிபாடு

பள்ளபாளையத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள ஸ்ரீ பர்வதவர்த்தினி உடனமர் ராமநாத ஈஸ்வரர் கோவில்.

கோவையின் ராமேசுவரம் என்று போற்றப்படும் பள்ளபாளையம் ஈஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

Published On 2022-11-10 06:11 GMT   |   Update On 2022-11-10 06:11 GMT
  • மஹா அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • புதியதாக மூன்று நிலை ராஜகோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த பள்ளபாளையத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ பர்வதவர்த்தினி உடனமர் இராமநாத ஈஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் கடந்த 1919-ம் ஆண்டிற்கு முன்பு நூற்றாண்டு காலம் சிறிய சிவாலயமாக இருந்து பின்னர் பரம்பரை அறங்காவலர்களால் தென் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமேசுவரம் கோவிலின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் கோவையின் ராமேஸ்வரம் என இப்பகுதி மக்களால் போற்றப்படுகிறது. இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் கூறியதாவது:-

இந்த கோவிலில் புதியதாக மூன்று நிலை ராஜகோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. விழாவை முன்னிட்டு சுமார் 3000 சதுரடியில் கோவிலுக்கு என்று நிரந்தர மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

கோவிலின் கும்பாபிஷேகத்தையொட்டி 27 குண்டங்கள் அடங்கிய யாகசாலையும், ஆகம விதிகளின்படி மந்திரங்கள் ஓதப்பட சுமார் 60 க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிலின் கும்பாபிஷேக விழாவானது கடந்த 8-ந் தேதி காலை மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தன பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து 9-ந் தேதி காலை முதல் கால யாக வேள்வி பூஜை, தீபாராதனையும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்நது 10-ந் தேதி (இன்று) விசேஷ சாந்தி, பூத சுத்தி, 108 த்ரவ்யாஹூதி, கோபுர விமான கலச பிரதிஷ்டையும், அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு எந்திர ஸ்தாபனமும், அஷ்ட பந்தன மருந்து சாத்தப்பட உள்ளது. மாலை விநாயகர் பூஜை, மண்டப பூஜை, யாக குண்ட பூஜை உடன் சிவபெருமானுக்கு எந்திர ஸ்தாபனமும் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை 11-ந் தேதி காலை நான்காம் கால வேள்வி பூஜை மகா சங்கல்பம், கும்ப கலச புறப்பாட்டு உடன் காலை 9.15 - 10.15 மணியளவில் மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேக விழாவையொட்டி காலை 9 மணி முதல் மஹா அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவையையொட்டி மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

Tags:    

Similar News