வழிபாடு

மருந்தீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா 16-ந்தேதி தொடக்கம்

Published On 2024-03-14 09:53 GMT   |   Update On 2024-03-14 09:53 GMT
  • திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர்கோவில் சிறப்பு பெற்றது.
  • பங்குனி திருவிழா 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சோழிங்கநல்லூர்:

திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர்கோவில் சிறப்பு பெற்றது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா வருகிற 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா வருகிற 26-ந்தேதி வரை 11 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

விழாவைமுன்னிட்டு தினந்தோறும் சந்திரசேகரர் பல்வேறு வாகனங்களில் காலை, மாலையில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 20-ந் தேதி காலை 9 மணிக்கு சந்திர சேகரர் தொட்டி விழா எமதர்மனுக்கு அருளல், இரவு விடையூர்திக் காட்சி (ரிஷபவாகனம்), பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது. 22-ந் தேதி காலை சந்திரசேகரர் தேர் திரு விழாவும், பிரம்மனுக்கு காட்சி அருளலும் நடைபெற உள்ளது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. தொடர்ந்து 23-ந் தேதி காலை 9 மணிக்கு சந்திர சேகரர் 4 மறைகளுக்கு அருளல், மாலை 6 மணிக்கு பரிவேட்டை விழா, இரவு 1 மணிக்கு தியாகராஜர் வீதி உலா நடைபெறுகிறது.

24-ந் தேதி பிற்பகல் 2 மணிக்கு கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் நடை பெறுகிறது. மாலை 6.30 மணிக்கு அகத்தியருக்கு திருமண காட்சி, வன்னி மரக்காட்சி நடைபெறுகிறது. 25-ந்தேதி திருவான்மியூர் குப்பம் கடற்கரையில் சந்திர சேகரர் கடல் நீராடல், இரவு 8 மணிக்கு திரிபுர சுந்தரி, தியாகராஜர் சுவாமி திருமண விழா, இரவு 10.30 மணிக்கு கொடியிறக்கம், தொடர்ந்து வால்மீகி முனிவருக்கு 18 திருநடன காட்சி அருளி வீடுபேறு அளித்தல் நடக்கிறது.

தெப்பத்திருவிழா

26-ந்தேதி மாலை சந்திர சேகரர் தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. இரவு வெள்ளியங்கிரி விமானத்தில் சுவாமி வீதி உலா, தியாகராஜர், திரிபுரசுந்தரி அம்மனுக்கு அருளல், அதிகாலை 4.30 மணிக்கு பந்தம்பரி 18 திருநடன காட்சி நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

Tags:    

Similar News