ஏமாற்ற நினைத்தவரை கனவில் துரத்திய பெருமாள்
- ஒரு பக்தர் வழக்கமாக திருக்கோவிலுக்கு வந்து செல்வார்.
- லட்சுமி நரசிம்மர் புன்னகையுடன் விளையாடினார்.
சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு பக்தர் வழக்கமாக திருக்கோவிலுக்கு வந்து செல்வார். எந்த காரியமாக இருந்தாலும் நரசிம்மரிடம் சம்மதம் (பூ போட்டு பார்த்தல்) கேட்டுவிட்டுத்தான் செய்வார். இவரிடம் லட்சுமி நரசிம்மர் கொஞ்சம் விளையாடி பார்த்தார்.
அவரது பையனுக்கு கல்லூரி அட்மிஷனுக்கு அலைந்து கொண்டிருந்த நேரத்தில், இன்னொரு பக்தர் இவரிடம் அறிமுகம் ஆனார். அவர் கல்லூரி அட்மிஷன் விசயத்தில் விவரம் தெரிந்தவர். ஆனாலும் பணத்தாசை. எனவே இந்த அட்மிஷனில் முதலாம் வருடம் இருந்து பெரிய தொகை பெற்றுக்கொண்டு அட்மிஷன் வாங்கித் தருவதாக வாக்களித்தார்.
வழக்கப்படி பையனின் தந்தை லட்சுமி நரசிம்மரிடம் பூப்போட்டு பார்த்தார். மல்லிகை பூ வந்தால் சரி, அரளிப்பூ வந்தால் வேண்டாம் என்ற நியதியில். லட்சுமி நரசிம்மர் இங்கு தான் புன்னகையுடன் விளையாடினார். சரி என்று மல்லிகை பூவே வந்தது.
தொடர்ந்து மகிழ்ச்சியுடன் பணத்தை கொடுத்துவிட்டு அட்மிஷனுக்காக காத்துக்கொண்டு இருந்தார். காலம் கடந்து ஏமாந்தது தெரியவந்தது. பெருமாளே விளையாடி விட்டானே என்று நொந்து கொண்டார். இருப்பினும் கோவிலுக்கு வருவதை நிறுத்தவில்லை.
சுமார் ஒரு வாரம் கழித்து பணம் வாங்கிய பெரிய மனிதர் அடித்து கட்டிக்கொண்டு பெருமாள் காலடியில் விழுந்தார். அவருக்கு ஒரு கனவு வந்ததாம். அதில் ஒரு சிம்மம் அவரை உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலை நோக்கி துரத்திக்கொண்டு வந்ததாம். மனிதர் அப்படியே அரண்டு போய் பணத்தை கொண்டுவந்து பணம் தந்தவரிடம் கொடுத்து சென்று விட்டார்.
ஒரு கேள்வி அனைவரது மனதிலும் தோன்றும். பூ கட்டி பார்த்தபோது வேண்டாம் என்று பெருமாள் காண்பித்து இருக்கலாமே? ஆனால் அந்த பணம் பெற்று ஏமாற்ற நினைத்தவரை திருத்தி நல்வழிப்படுத்த முடியாதே? அதற்குதான் இந்த விளையாட்டு.