கார்த்திகை மாதம் முழுவதும் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் பகல் முழுவதும் நடை திறப்பு
- கோவிலில் வழக்கமாக நடக்கும் பூஜைகள் நடைபெறும்.
- ஏராளாமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
திருப்பத்தூர் அருகே உள்ளது பிள்ளையார்பட்டி. இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. குடவரை கோவிலாக உள்ள இக்கோவிலுக்கு தினந்தோறும் ஏராளாமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். ஆங்கில புத்தாண்டு, விநாயகர் சதுர்த்தி விழா காலங்கள் மற்றும் தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ காலங்களில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்து செல்வார்கள். ஆண்டுதோறும் வரும் கார்த்திகை மாதம் மற்றும் தைப்பூச காலங்களில் ஏராளமான ஐயப்ப பக்தர்களும், முருக பக்தர்களும் தமிழகம் முழுவதும் இருந்து இங்கு வருவது வழக்கம். இதற்காக கார்த்திகை மாதம் தொடக்கம் முதல் தைப்பூசம் வரை பகல் நேரங்களில் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடை திறந்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும்.
இந்நிலையில் இன்று கார்த்திகை மாதம் பிறப்பையொட்டி ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்குவார்கள். இதேபோல் தை பூச திருவிழாவும் நெருங்கி வருவதையொட்டி பழனி கோவிலுக்கு செல்லும் முருக பக்தர்கள் விரதமிருந்து மாலை அணிவிக்க தொடங்குவார்கள்.
பக்தர்களின் தரிசனத்திற்காக இன்று முதல் பிள்ளையார்பட்டி கோவில் பகல் முழுவதும் நடை திறக்கப்படுகிறது. இதுகுறித்து கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டனூர் என். கருப்பஞ்செட்டியார் மற்றும் ஆத்தங்குடி முத்துப்பட்டினம் சி.சுப்பிரமணியன்செட்டியார் ஆகியோர் கூறியதாவது:-
பக்தர்கள் விரதம் தொடங்கும் காலங்களில் பிள்ளையார்பட்டி கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். அவர்களின் பயணம் தாமதமின்றி தொடரவும், கூட்ட நெரிசல் இல்லாமல் விரைந்து சாமி தரிசனம் செய்வதற்காகவும் இன்று முதல் கோவிலில் காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடை சாத்தப்படாமல் பகல் முழுவதும் கோவில் திறந்து இருக்கும். அதேபோல் கோவிலில் வழக்கமாக நடக்கும் பூஜைகள் நடைபெறும். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு வசதி மற்றும் கார் பார்க்கிங் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.