வழிபாடு

பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் 1008 கலசாபிஷேக விழா

Published On 2022-07-14 06:58 GMT   |   Update On 2022-07-14 06:58 GMT
  • 17-ந்தேதி யாகசாலை பூஜை, பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடக்கிறது.
  • 19-ந்தேதி மதியம் 12 மணிக்கு கலசாபிஷேக தொடக்க அலங்காரம், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற குடவறை கோவிலான இந்த கோவிலுக்கு தினந்தோறும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம். இதையடுத்து உலக மக்கள், நோயின்றி ஆரோக்கியமாக வாழவும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், உலக நன்மை வேண்டி 1008 கலசாபிஷேக விழா நேற்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

முன்னதாக பிள்ளையார்பட்டி தலைமை குருக்களான பிச்சைகுருக்கள் தலைமையில் நேற்று காலை 9மணிக்கு சங்கல்பத்துடன் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை தொடங்கியது. தொடர்ந்து கோமாதா பூஜையுடன் மதியம் 12.45மணிக்கு சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்று (வியாழக்கிழமை) காலை சாந்தி ஹோமம், திரச ஹோமமும் மாலை 5.30மணிக்கு ரசோக்ன ஹோமம் நடக்கிறது. 15-ந்தேதி காலை 8.30 மணிக்கு நவக்கிரக ஹோமம், அஸ்த்ரமந்த ஐயம் நிகழ்ச்சியும், மாலை 5.30 மணிக்கு வாஸ்து சாந்தி நிகழ்ச்சியுடன் யாகசாலை மண்டபத்தில் 1008 கலசாபிஷேக விழா நடக்கிறது.

16-ந்தேதி காலை 8.30மணிக்கு தீர்த்தஸங்க்ரகணம் நிகழ்ச்சியும், மாலை 4.30மணிக்கு மிருத்சங்கிரஹரணம், அங்குரார்ப்பணம், ரக்‌ஷா பந்தனம், கடஸ்தாபனமும், இரவு 8.30மணிக்கு முதற்கால யாகசாலை பூஜைகள், சதுர்லெக்ச ஜெபம் தொடங்குகிறது.

தொடர்ந்து முதற்கால பூர்ணாகுதியும், தீபாராதனையும் நடக்கிறது. 17-ந்தேதி காலை 8.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மதியம் 11.30 மணிக்கு 2-ம் கால பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை, மாலை 6 மணிக்கு 3-வது கால யாகசாலை பூஜை, இரவு 8.30 மணிக்கு 3-வது கால பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடக்கிறது. வருகிற 18-ந்தேதி காலை 9 மணிக்கு 4-வது கால யாகசாலை பூஜை, மதியம் 12 மணிக்கு 4-வது கால பூர்ணாகுதி மற்றும் தீபாராதனையும், மாலை 5 மணிக்கு 5-வது கால யாக பூஜை இரவு 8.30 மணிக்கு 5-வது கால பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடக்கிறது.

வருகிற 19-ந்தேதி காலை 8.30 மணிக்கு 6-வது கால யாக பூஜை, 6-வது கால மஹாபூர்ணாகுதி தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு கலசாபிஷேக தொடக்க அலங்காரம், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மேலும் 1008 கலசாபிஷேக யாகசாலை நிகழ்ச்சியின்போது திருமறை, திருமுறை பராயணங்களும், சிறப்பு நாதஸ்வர மேளம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் கண்டனூர் கருப்பஞ் செட்டியார் மற்றும் ஆத்தங்குடி முத்துப்பட்டினம் சுப்பிரமணியன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News