பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்
- பக்தர்களுக்கு திருக்குளத்தில் தண்ணீர் தீர்த்தமாக தெளிக்கப்பட்டது.
- இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதி உலா நடந்தது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் காலையில் வெள்ளி கேடயத்திலும் இரவு மூஷிக, சிம்மம், பூத, கமல, ரிஷிப, மயில், குதிரை, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கற்பகவிநாயகர் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. 6-ம் நாளில் கஜமுக சூரசம்ஹாரம், 9-ம் நாள் தேரோட்டம் நடந்தது.
நேற்று 10-ம் நாள் திருவிழாவாக விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு மூலவர் தங்க அங்கியில் காட்சியளித்தார். தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை 10 மணிக்கு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர் அலங்கரிக்கப்பட்டு கோவில் வளாகத்தில் சிறப்பு தீபாராதனை நடந்தது.
அதன் பின்னர் உற்சவர், கோவில் திருக்குள கரையில் எழுந்தருளினார். அங்கு கோவில் தலைமை பிச்சைக்குருக்கள் தலைமையில் அங்குச தேவருக்கு பால், பன்னீர், தயிர் உள்ளிட்ட 16 திரவிய பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அங்கு அங்குச தேவருக்கு கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம், சிறப்பு தீபாராதனை நடந்தது. அப்போது பக்தர்களுக்கு திருக்குளத்தில் தண்ணீர் தீர்த்தமாக தெளிக்கப்பட்டது. அதன் பின்னர் கோவில் திருக்குளத்தை சுற்றி வந்த உற்சவர் கற்பகமூர்த்தி மீண்டும் கோவிலுக்கு எழுந்தருளினார்.
தொடர்ந்து மதியம் மூலருக்கு அபிஷேகம் நடைபெற்று மதியம் 1.45 மணிக்கு 18 படி கொண்ட முக்குறுணி கொழுக்கட்டை படையலுக்காக திருப்பள்ளியில் இருந்து எடுத்து செல்லப்பட்டு மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதி உலா நடந்தது.