மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு
- மாசிக்கொடை விழா மார்ச் 5-ந்தேதி தொடங்குகிறது.
- இந்த விழா 14-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இங்கு கேரள பெண் பக்தர்கள் இரு முடிக்கட்டி வந்து அம்மனை வழிபடுவதால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிக்கொடை விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டு மாசிக்கொடை விழா அடுத்த மாதம் (மார்ச்) 5 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 14-ந் தேதி வரை நடக்கிறது. விழா நடைபெறும் 10 நாட்களிலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
திருவிழா தொடங்குவதற்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் நேற்று முதல் கேரள பக்தர்கள் மண்டைக்காட்டிற்கு வர தொடங்கி உள்ளனர். அவர்கள் சுற்றுலா வேன்கள், பஸ்களில் வந்தனர். கேரள பக்தர்கள் கடலில் கால் நனைத்து கோவில் வளாகத்தில் பொங்கலிட்டு அம்மனை வழிப்பட்டனர்.
கேரள பக்தர்களின் வருகையால் மண்டைக்காடு கோவில் சன்னதி, கோவில் வளாகம், பீச் சந்திப்பு, கடற்கரை போன்ற பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை விழா இப்போதே களைகட்ட தொடங்கியுள்ளது.