- ராகுவிற்கு எந்த வீடும் சொந்தமில்லை.
- அனுகூல ராகு கீழான ஒருவரை சக்கரவர்த்தியாக மாற்றும் வலிமை படைத்தவர்.
சந்திரனையும், சூரியனையும் பலம் இழக்கும்படியாகவும், ஒளி குன்றும்படியாகவும் கட்டுப்படுத்தும் ஆற்றல் ராகு மற்றும் கேதுவிற்கு உண்டு. ராகுவிற்கு எந்த வீடும் சொந்தமில்லை. அதாவது எந்த ராசியும் ராகுவிற்கு சொந்தமாக இல்லை. ராகு எந்தராசியில் இருக்கின்றாரோ, எந்த கிரகத்தினால் பார்க்கப்படுகின்றாரே சிறந்த இடத்தில் சேர்க்கை பெற்றுள்ளாரோ அந்த இடத்தின் பலன்களை முழுமையாக தருவார்.
ஒருவரது ஜாதகத்தில் அனுகூலம் தரும் நல்ல இடத்தில் ராகு இருந்து விட்டால், அந்த நபருக்கு நல்ல மனைவி, நல்ல வேலைக்காரர், ஆட்சி மற்றும் செல்வாக்கு ஆகியவை அமையும். பல்வேறு மொழிகளில் தேர்ச்சி பெறுவதற்கும் ராகுவேகாரணமாகிறார். மருந்து, வேதியியல், நூதன தொழில் நுட்பக் கருவிகள் ஆகியவற்றுக்கும், அவ்வப்போது மாறி வரும் நவ நாகரிகத்திற்கும் ராகுவுடன் இணைந்த சுக்ரன் காரணமாக அமைகிறார்.
அரசியல் செல்வாக்கு, ஆட்சியுரிமை போன்றவற்றுக்கும் ராகுவின் அனுக்கிரகம் நிச்சயம் தேவை. அனுகூல ராகு கீழான ஒருவரை சக்கரவர்த்தியாக மாற்றும் வலிமை படைத்தவர். மந்திரஜாலம், கண்கட்டி வித்தை போன்றவைகளும் ராகுவின் அனுக்கிரகத்தால் தான் கைவரப்பெறும். ராகு ஒருவரை குபேரபுரிக்கு அழைத்துச் செல்வார்.
அதேநேரத்தில் ராகு தோஷம் ஒருவருக்கு அமைந்தால். அந்த நபர் மிகவும் கடுமையான பலன்களையும் அனுபவிப்பார். ஒருவரது ஜாதகத்தில் 7-வது இடத்தில் ராகு இருப்பதால் திருமணம் தாமதமாகிறது. இல்லற வாழ்க்கை சிறப்பதற்கும் ராகுவின் அனுக்கிரகம் தேவை. 5-ம் இடத்தில் இருக்கும் ராகுவால் புத்திர தோஷம் ஏற்படுகிறது. ஆகவே களத்திர தோஷம், புத்திரதோஷம் ஆகியவை நீங்குவதற்கு ராகுவை வழிபடுதல் வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருநாகேஸ்வரம். இங்கு நாகநாத சுவாமி கோவில் உள்ளது. ராகு பகவான். சிவபெருமானை பூஜித்த சிறப்புமிக்க தலம் இது. ஆதலால் தான் இந்த தலத்தை 'திருநாகேஸ்வரம்' என்று அழைக்கிறார்கள்.
பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த ஆலயத்தில், நாகநாத சுவாமி, பிறையணி அம்மன், கிரிகுஜாம்பிகை ஆகியோர் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். இந்தக் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் ராகு பகவான் தனது இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளார்.
சுசீல முனிவரின் பிள்ளையை, அரவாகிய ராகு தீண்டியது. இதனால் ராகுவிற்கு சாபம் ஏற்பட்டது. இந்த சாபம் நிவர்த்தி பெற நான்கு தலங்களை வழிபட்டு முடிவில் திருநா கேஸ்வரத்தில் உள்ள நாகநாத சுவாமியை மகா சிவராத்திரி நாளில் வழிபட வேண்டும். அதன்படியே ராகு பகவான் நாகநாத சுவாமியை வழிபாடு செய்து சாபம் நீங்கப் பெற்றார்.
அதோடு இத்தல சிவபெருமான். ராகுவுக்கு ஒரு வரத்தையும் அளித்தார். "இத்தலத்திற்கு வந்து என்னை வழிபடும் பக்தர்கள் உன்னையும் வணங்கினால், உன்னால் ஏற்படக் கூடிய கால சர்ப்ப தோஷம், சர்ப்ப தோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம் ஆகியவை நீங்கும்" என்று அருளினார்.
அதன்படி ராகு பகவானும் இந்த ஆலயத்தில் மங்கள ராகுவாக, நாககன்னிமற்றும் நாகவள்ளி ஆகிய இரு தேவியருடன் நிருதி மூலையில் அமர்ந்து, தன்னை வணங்கும் பக்தர்களுக்கு தோஷங்களை நீக்கி அருள்பாலிக்கிறார்.
பல்வேறு தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், இத்தல சூரிய புஷ்கரணியில் நீராடி, நாகநாத சுவாமியை வழிபட்டு, பின்னர் ராகுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி நன்மை கிடைக்கும். இந்த ஆலயத்திற்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து எண்ணற்ற பக்தர்கள் வந்து பால் அபிஷேகம் செய்து வழிபட்டு செல்கின்றனர்.
இங்குள்ள ராகு பகவானுக்கு, பாலா பிஷேகம் செய்யும்போது, அந்த பாலானது நீல நிறமாக மாறும் அதிசயம் நிகழ்கிறது. இந்த ஆலயத்தில் ராகு-கேது பெயர்ச்சி நடைபெறும் நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டால் அதற்கேற்ற பலன்கள் கிடைக்கும்