திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் ராகு பெயர்ச்சி விழா
- 16 வகையான திரவியங்களை கொண்டு மகா அபிஷேகங்கள் நடைபெற்றது.
- 3 நாட்களுக்கு ராகு பகவான் சன்னதியில் லட்சார்ச்சனை நடக்கிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகு தலம் கிரிகுஜாம்பிகை நாகநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவலில் நவக்கிரகங்களுள் முதன்மையானவராக திகழும் ராகு பகவான், நாகவல்லி, நாகக்கன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். இவரது திருமேனியில் பால் அபிஷேகம் செய்யும் போது அந்த பாலானது நீல நிறமாக மாறும்.
ராகு பகவான் 1½ வருடங்களுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து, மற்றொரு ராசிக்கு பின்னோக்கி நகர்வார். இது ராகுப்பெயர்ச்சி விழாவாக நடைபெறுகிறது.
நேற்று பிற்பகல் 3.40 மணிக்கு ராகுபகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்ததை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள், அபிஷேக ஆராதனை, லட்சார்ச்சனை, நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த 6-ந்தேதி மாலை முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நேற்றுமுன்தினம் காலை 2-ம் காலம், மாலை 3-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை 4-ம் காலம் யாக பூஜைகள் நடைபெற்று மதியம் 2.30 மணிக்கு கடங்கள் புறப்பட்டு ராகுபகவான் சன்னதிக்கு வந்தது.
ராகு பகவானுக்கு மஞ்சள், திரவியம், பஞ்சாமிர்தம் தேன் பால் இளநீர் பன்னீர் சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களை கொண்டு மகா அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து கடம் அபிஷேகம் நடந்தது. பின்னர் தங்கமுலாம் பூசிய கவச அலங்காரத்தில் நாககன்னி நாகவல்லி உடனாய ராகு பகவான் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். ராகு பெயர்ச்சி அடையும் மதியம் 3.40 மணிக்கு ராகு பகவானுக்கு விசேஷ தீபாராதனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) முதல் 3 நாட்களுக்கு ராகு பகவான் சன்னதியில் லட்சார்ச்சனை நடக்கிறது.