வழிபாடு

ரமலான் நோன்பு இன்று அதிகாலை தொடங்கியது

Published On 2023-03-24 03:32 GMT   |   Update On 2023-03-24 03:32 GMT
  • நேற்று இரவு முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டதுடன், அதிகாலை முதல் நோன்பு தொடங்கினர்.
  • நோன்பு காலக்கட்டத்தில் முஸ்லிம்கள் திருக்குரான் அனைத்தையும் வாசிக்கவேண்டும்.

முஸ்லிம்களின் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று ரமலான் எனப்படும் ரம்ஜான் பண்டிகை ஆகும். இந்த ரமலான் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் காலை சூரிய உதயம் தொடங்கி மாலை சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருப்பார்கள்.

மேலும் இந்த நாட்களில் வசதி இல்லாதவர்களுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் உதவி செய்யவேண்டும் என்பது இஸ்லாமிய மக்களின் கடமையாகும். இந்த உதவியை தான் சகத் என்கிறார்கள். மேலும் நோன்பு காலக்கட்டத்தில் முஸ்லிம்கள் திருக்குரான் அனைத்தையும் வாசிக்கவேண்டும். இந்த காலக்கட்டத்தில் பொறுமையுடன் இருக்க வேண்டும். கெட்ட பழக்கங்களை கைவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இறைவன் எப்போதும் அவர்களுக்கு அருகிலேயே பயணிப்பது போன்ற எண்ணம் ஏற்படும் என நம்பப்படுகிறது.

இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை காஜி சலாவுத்தீன் முகமது ஆயுப் வெளியிட்ட அறிவிப்பில்,

தமிழகம் முழுவதும் 22-ந் தேதி பிறை தென்படாததால் நேற்று மாலை ரமலான் மாத முதல் பிறையாக கணக்கிடப்பட்டு இரவு தொழுகை நடைபெறுகிறது. நோன்பு நோக்கவும், அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ந்தேதி (சனிக்கிழமை) இரவு பத்ரு ஸஹாபாக்கள் நினைவு நாள் என்றும், 12-ந்தேதி மரீப் முதல் தொடங்க உள்ளது. 18-ந்தேதி மாலை பெரிய இரவு என அழைக்கப்படுகின்ற லைலத்துல் கதர் இரவு என்றும், ரமலான் ஈத் 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு சந்தேக நாள் என நினைவு படுத்தப்படுகிறது. அனைவரும் ரமலான் மாதத்தில் பகலில் நோன்பு வைத்து இரவில் இபாதத்தில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து நேற்று இரவு முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டதுடன், அதிகாலை முதல் நோன்பு தொடங்கினர்.

Tags:    

Similar News