வழிபாடு

ராமேசுவரம் கோவிலில் அம்மன் தேரோட்டம்

Published On 2023-07-22 05:38 GMT   |   Update On 2023-07-22 05:38 GMT
  • நாளை சுவாமி-அம்பாள் நிச்சயதார்த்தம் நடக்கிறது.
  • 24-ந்தேதி சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா மற்றும் மாசி மகா சிவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடி திருக்கல்யாண விழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் 9-ம் நாளான நேற்று அம்மன் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி பர்வதவர்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில், கோவிலின் கிழக்கு வாசல் எதிரே தேரில் எழுந்தருளினார்.

இதை தொடர்ந்து விநாயகர், சண்டிகேசுவரர் தேர்களையும், அம்மன் தேரையும் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். கோவிலின் இணை ஆணையர் மாரியப்பன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். அம்மன் தேரை உள்ளூர் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்தும் வந்திருந்த திரளான பக்தர்கள் பக்தி கோஷங்களுடன் இழுத்தனர். காலை 10.20 மணிக்கு கிழக்கு வாசல் பகுதியில் இருந்து புறப்பட்ட அம்மன் தேர், பக்தர்கள் வெள்ளத்தில் வந்தது. மதியம் 12 மணிக்கு நிலையை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் தேரில் வீற்றிருந்த பர்வதவர்த்தினி அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

நேற்று இரவு 8 மணிக்கு அம்மன், வெள்ளி கிளி வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவிழாவின் 10-ம் நாள் நிகழ்ச்சியாக இன்று காலை 9 மணிக்கு அம்மன் தங்க பல்லக்கில் காட்சி தருகிறார். மதியம் 12 மணிக்கு கோவிலில் உள்ள சிவதீர்த்தத்தில் அம்மன் மஞ்சள் நீராடல் மற்றும் பூரம் தொழுதல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

11-ம் நாளான நாளை காலை 6 மணிக்கு அம்மன், வெள்ளி கமல வாகனத்தில் ராமர் தீர்த்தம் அருகே உள்ள தபசு மண்டகப்படிக்கு செல்கிறார். பகல் 11 மணிக்கு ராமநாத சுவாமி தங்க ரிஷப வாகனத்தில் தபசு மண்டகபடிக்கு எழுந்தருள்கிறார். பிற்பகல் 2 மணியில் இருந்து 3 மணிக்குள் சுவாமி-அம்பாள் தபசு மண்டகப்படியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு அனுமன் சன்னதியில் நிச்சயதார்த்தமும் நடக்கிறது. நாளை மறுநாள் இரவு 7.30 மணியிலிருந்து 8.30 மணிக்குள் சிகர நிகழ்ச்சியாக சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்க இருக்கிறது.

Tags:    

Similar News