வழிபாடு

நந்தி பற்றிய அரிய தகவல்கள்

Published On 2024-10-18 03:25 GMT   |   Update On 2024-10-18 03:25 GMT
  • நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள்.
  • பிரதோஷ காலங்களில் நந்தியை வழிபடுபவர்களுக்கு பெரும் பேறு கிடைக்கும்.

நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள். நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது.


பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு பெரும் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

நந்தி அனுமதி கிடைத்தால் தான் ஈசன் அருளைப்பெற முடியும். எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், "என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்" என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.

நந்தி என்ற வார்த்தையுடன் ஆ சேரும்போது ஆநந்தி என்ற பொருள் தருகிறது. `நீயும் ஆனந்தமாக இரு, பிறரையும் ஆனந்தமாக வைத்திரு!' என்று சிவபெருமான் நந்திக்கு அளித்த வரம் அது.

ஆந்திர மாநிலம் லேபாட்சியில் உள்ள கருங்கல்லில் வடிக்கப்பட்ட நந்தியே, இந்தியாவில் உள்ள கல் நந்திகளில் பெரிய நந்தியாம்.

ஆலயங்களை காவல் காக்கும் அதிகாரமும் நந்திக்கே உரியது என்பது தெளிவாகிறது. இதன் அடையாளமாகத் தான் திருக்கோவில்களின் மதில் சுவர்களில் நந்தியின் திருவுருவை அமைத்துள்ளனர்.

இதேபோல் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தரும் நந்தீஸ்வரர் அருள்புரியும் சிவன் கோவில்கள் மிகவும் போற்றப்படுகின்றன.

இந்திய வரலாற்றை ஆராய்ந்தால் தத்துவம், யோகம், நாட்டியம், இசை, ஆயுர்வேதம், அஸ்வவேதம், காமவேதம் முதலிய பல்வேறு சாத்திரங்களைத் தோற்றிவைத்தவராக நந்திகேசுரர் என்ற முனிவர் வாழ்ந்திருக்கிறார் என அறியலாம்.


கொடிமரத்திற்கும், நந்திக்கும் இடையில் நந்தியின் பின்புறம் இருந்து இறைவனை நோக்கி வழிபடவேண்டும். இந்த நந்தியை அதிகார நந்தி என்பார்கள். இவர் பூவுலகில் கடுமையாகத் தவம் செய்து பதினாறு வரங்களைப் பெற்றவர். சிவகணங்களின் தலைவர்.

கொடிமரம் இல்லாத கோவில்களில் சிவனை நோக்கி ஒரு நந்தி காட்சி தருவார். இவரை 'ப்ராஹார நந்தி' என்பார்கள்.

சிவ பெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவரே மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது.

சிவபெருமானின் முக்கண்ணின் பார்வைக்கு எதிரில் நிற்க நந்திதேவரைத் தவிர வேறுயாராலும் இயலாது. இது சிவபெருமானே நந்தி தேவருக்கு அளித்த வரமாகும்.

நந்திகேசுவரரின் மறு அவதாரமாக அனுமான் கருதப்படுகிறார்.

நந்திகேஸ்வரரின் வரலாற்றை லிங்க புராணம் கூறுகிறது. பிறப்பில் எம்பெருமானாகிய சிவபெருமானே நந்திகேஸ்வரராகப் பிறந்து கணங்களின் தலைவரானார் என்பது புராண மரபு.


நந்திக்கு இவ்வுலகத்தின் எதையும் கண்டிக்கவும் தண்டிக்கவும் அதிகாரம் வழங்கியுள்ளான் பரமேஸ்வரன்.

நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும் நெய்விளக்கும் வைத்து வழிபட வேண்டும்.

பிரதோஷ காலம் மட்டுமின்றி எக்காலத்தும் நாம் சிவபெருமானிடம் வைக்கும் வேண்டுதல் களை நந்திதேவரிடம் வைத்தால் போதும். அவர் அதைப் பரமேஸ்வரனிடம் கொண்டு சேர்த்துவிடுவார் என்பது ஐதீகம்.

Tags:    

Similar News