இடைக்காட்டூர் இருதய ஆண்டவர் ஆலய தேர் பவனி
- ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
- நற்கருணை நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
மானாமதுரை அருகே உள்ளது இடைக்காட்டூர். இங்கு புகழ்பெற்ற இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது. தமிழக அரசால் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்ட இந்த ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். மேலும் கிறிஸ்தவர்கள் கொண்டாடும் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட முக்கிய விழாக்களில் இங்கு சிறப்பு திருப்பலி நடைபெறும். அன்றைய தினங்களில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் இங்கு வந்து திருப்பலி நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.
தமிழகத்திலேயே ஏசுநாதர் தனது இடது பக்கத்தில் இருதயத்தை காண்பித்தப்படி உள்ள ஒரே ஆலயம் இந்த ஆலயம்தான். இங்கு ஆண்டுதோறும் ஜூலை மாதம் முதல் 10 நாட்கள் வரை திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த விழா நடைபெறும் தினங்களில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பங்குத்தந்தைகள் கலந்து கொண்டு ஏசுநாதரின் வாழ்க்கை வரலாறு குறித்து எடுத்துரைப்பார்கள்.
129-ம் ஆண்டு திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. விழாவின் 9-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று இரவு அலங்கரிக்கப்பட்ட தேரில் இருதய ஆண்டவர் தேர் பவனி நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். இன்று 10-ம் நாள் நிகழ்ச்சியாக நற்கருணை நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை இருதய ஆண்டவர் திருத்தல அருட்பணியாளர் இம்மானுவேல்தாசன் தலைமையில் இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம், செல்ஸ் இளைஞர் பேரவை உள்ளிட்ட பங்கு இறைமக்கள் செய்திருந்தனர்.