வழிபாடு

திருஇருதய ஆண்டவர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2022-06-25 05:21 GMT   |   Update On 2022-06-25 05:21 GMT
  • வருகிற 1-ந்தேதி தேர் பவனி மற்றும் சிறப்பு திருப்பலி நடக்கிறது.
  • 2-ந் தேதி நற்கருணை நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

மானாமதுரை அருகே இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி வருகிற 1-ந்தேதி தேர் பவனி நடக்கிறது.

மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் புகழ்பெற்ற திருஇருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது. தமிழக அரசால் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்ட இந்த ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு திருப்பலி நடைபெறுவது வழக்கம். தமிழகத்திலேயே ஏசுநாதர் தனது இடது பக்கத்தில் இருதயத்தை காண்பித்தப்படி உள்ள ஒரே ஆலயம் இந்த ஆலயம் தான். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

இந்தாண்டிற்கான இந்த திருவிழா நேற்று மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சிவகங்கை முன்னாள் மறை மாவட்ட ஆயர் சூசை மாணிக்கம் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

விழாவின் 9-ம் நாள் நிகழ்ச்சியாக வருகிற 1-ந்தேதி தேர் பவனி மற்றும் சிறப்பு திருப்பலியும், 10-ம் நாள் நிகழ்ச்சியாக மறுநாள் 2-ந் தேதி நற்கருணை நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை திரு இருதய ஆண்டவர் ஆலய அருட்பணியாளர் இம்மானுவேல்தாசன் தலைமையில் இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம், செல்ஸ் இளைஞர் பேரவை உள்ளிட்ட பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News