வழிபாடு

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா: விடிய, விடிய பொங்கல் வைத்த பெண்கள்

Published On 2023-08-09 04:01 GMT   |   Update On 2023-08-09 05:36 GMT
  • நேற்றிரவு முதல் விடிய விடிய ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும் அம்மனை வழிபட்டு வருகிறார்கள்
  • கோவில் வளாகத்தை சுற்றி சி.சி.டி.வி. கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சேலம்:

சேலம் பழைய பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஆடித்திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.

அதன்படி நடப்பாண்டு திருவிழா கடந்த மாதம்25-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து நாள் தோறும் இரவு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்தல் வைபவம் நேற்று தொடங்கியது. இதயைடுத்து நேற்று காலை முதலே கோவிலுக்கு வந்த பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து நேற்றிரவு முதல் விடிய விடிய ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும் அம்மனை வழிபட்டு வருகிறார்கள். இன்று காலையும் கோவிலில் குவிந்த ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை நீண்ட வரிசையில் காத்து நின்று தரிசனம் செய்து வருகிறார்கள். இதையொட்டி கோவில் அருகே தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் அதன் வழியாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்தும் குடும்பத்துடன் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்ததால் கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. மேலும் பக்தர்கள் நீண்ட தூரம் காத்து நின்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் பக்தர்கள் சார்பில் கூழ் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் டவுன் போலீஸ் கமிஷனர் வெங்கடேஷ் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகி றார்கள். மேலும் கோவில் வளாகத்தை சுற்றி சி.சி.டி.வி. கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாநகரில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா நடந்து வருகிறது. அதன்படி சேலம் குகை மாரியம்மன், காளியம்மன், சேலம் சின்ன மாரியம்மன், தாதாகப்பட்டி மாரியம்மன், அம்மாப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன், பலபட்டரை மாரியம்மன், நஞ்சம்பட்டி மாரியம்மன், தாதம்பட்டி மாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், காமராஜர் காலனி மாரியம்மன் உள்பட பல்வேறு மாரியம்மன் கோவில்களிலும் நேற்று முதல் பக்தர்கள் திரண்டு பொங்கல் வைத்து வழிபட்டு வருகிறார்கள்.

தொடர்ந்து மாவிளக்கு ஊர்வலம், அலகு குத்துதல், அக்னி மற்றும் பூக்கரகம் எடுத்தல், போன்ற நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று பக்தர்கள் முதுகில் அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர். சிலர் விமான அலகு குத்தி கோவிலுக்கு வந்தனர். இதனை பார்த்தபக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

ஆடிப்பண்டி கையையொட்டி சேலம் மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஆடிப்பண்டிகையொட்டி சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவில்களில் அதிக அளவில் கூட்டம் அலை மோதியது. இதை யொட்டி கோவில்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News