வழிபாடு

திருமண கோலத்தில் விளங்குளம் சனீஸ்வரர்

Published On 2023-12-26 05:10 GMT   |   Update On 2023-12-26 05:10 GMT
  • 700 ஆண்டுகள் பழமையானது அட்சயபுரீஸ்வரர் திருக்கோவில்.
  • திருமண கோலத்தில் சனி பகவான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

தஞ்சை மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள கடலோரப் பகுதி, சேதுபாவாசத்திரம். இந்த ஊரின் அருகே உள்ள விளங்குளம் என்ற இடத்தில் 700 ஆண்டுகள் பழமையான அட்சயபுரீஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. தோஷ நிவர்த்தி தலமாக விளங்கும் இந்த ஆலயத்தில், மாந்தா - ஜேஸ்டா ஆகிய இரண்டு மனைவிகளுடன் திருமண கோலத்தில் சனி பகவான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

 சூரிய பகவானின் மகன்களான சனீஸ்வரருக்கும், எமதர்மராஜனுக்கும் சிறு வயதில் பகை இருந்தது. அதனால் சனியின் காலில் எமதர்மராஜன் அடிக்க, சனியின் காலில் ஊனம் ஏற்பட்டது. அந்தக் கால் ஊனத்துடன் மன அமைதி தேடி, பூலோகத்தில் அமைந்த புனிதத் தலங்களை தரிசித்து வந்தார், சனி பகவான். சுரைக்காய் குடுவையை ஏந்தி பிச்சை பெற்று, அதில் கிடைக்கும் தானியங்களை சமைத்து அன்னதானமாக அளித்து வந்தார்.

ஒரு நாள் விளாமரங்கள் அடர்ந்த இந்த பகுதிக்கு வந்தார், சனி பகவான். அப்போது ஓரிடத்தில் விளாமரத்தின் வேரால் தடுக்கப்பட்டு, அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தார். அங்கே பல கோடி யுகங்களாக மறைந்திருந்த `பூச ஞான வாவி' என்ற ஞான தீர்த்தம் சுரந்து, சனி பகவானை மேல் எழுப்பி கரை சேர்த்தது. இது நடந்தது சித்திரை மாத வளர்பிறை திருதியையும், பூச நட்சத்திரமும், சனிக்கிழமையும் சேர்ந்த ஒரு தினமாகும். இதனால் சனி பகவானின் ஊனம் நிவர்த்தியானதாக தலவரலாறு சொல்கிறது.

சனி பகவான் விழுந்த பள்ளத்தில் நீரூற்றாக வெளிப்பட்ட ஞான வாவி, குளமாக மாறியதால், இந்த கிராமம் 'விளம்குளம்' என்று அழைக்கப்பட்டது. பின்னர் அதுவே மருவி `விளங்குளம்' என்றானது. ஊனம் நீக்குதல், திருமணத்தடை போன்ற தோஷ நிவர்த்தி தலமாக விளங்கும் இந்தக் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

அதுமட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் இங்கே வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம். இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் அட்சய திருதியை திருநாளில் விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகிறது. சனிப் பெயர்ச்சி அன்றும் இங்கே விசேஷ பூஜைகள் செய்யப்படும்.

Tags:    

Similar News