சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கோலாகலத்துடன் தொடங்கியது
- 29-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
- 31-ந்தேதி கோமதி அம்மனுக்கு சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரம் நாளில் தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் ஆடித்தபசு திருவிழா மிக முக்கிய திருவிழா ஆகும்.
இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு காலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு திருவனந்தல் பூஜை நடந்தது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோமதி அம்பாள் சிவிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து காலை 6.16 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற பூஜைகளை சிவராமன் தலைமையிலான பட்டர்கள் செய்திருந்தனர்.
தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை கோமதி அம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து தினமும் இரவு மண்டகப்படியில் இருந்து வெவ்வேறு வாகனங்களில் கோமதி அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவில் 9-ம் திருநாளான வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு 11-ம் திருநாளான 31-ந் தேதி தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறுகிறது. அன்று காலை 9 ஸ்ரீகோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்கார பரிவட்டம் சாத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்ந்து மதியம் 12 மணிக்கு தங்கச்சப்பரத்தில் தவக்கோலத்தில் கோமதி அம்மன் தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டகப்படியில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு சிவபெருமான் அரியும், சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில் சங்கர நாராயண சுவாமியாக ரிஷப வாகனத்தில் கோமதி அம்மனுக்கு தபசு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், அன்று இரவு 12.05 மணிக்கு மேல் சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் கோமதி அம்மனுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.
கொடியேற்ற நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., சங்கரன் கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி, தூத்துக்குடி அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, சங்கரன் கோவில் துணை ஆணையர் ஜான்சி ராணி, கொடி யேற்ற மண்டகப்படி நிர்வாகிகள் கம்மவார் நாயுடு மகாஜன நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.