சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா இன்று தொடங்குகிறது
- தேரோட்டம் 29-ந்தேதி நடைபெறுகிறது.
- ஆடித்தபசு காட்சி 31-ந் தேதி நடைபெற உள்ளது.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில், தென் தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமாள் கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராகவும், சங்கரலிங்கமூர்த்தியாகவும் காட்சி கொடுத்தார்.
இத்தகைய அரிய நிகழ்ச்சியை ஆடித்தபசு திருவிழாவாக பக்தர்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6.15 மணிக்கு மேல் 7 மணிக்குள் கோமதி அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 12 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா செல்கிறார்கள்.
முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 9-ம் திருநாளான வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) காலை நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி 11-ம் திருநாளான 31-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை நெல்லை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி, சங்கரநாராயண சுவாமி கோவில் துணை ஆணையர் ஜான்சிராணி மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.