சங்கரன்கோவில் சங்கரநாரயண சுவாமி கோவில் சித்திரை திருவிழா நாளை கொடியேற்றம்
- யானை பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி இன்று நடக்கிறது
- மே 3-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில், தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தோறும் பிரம்மோற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் காலை, மாலை இருவேளைகளில் சுவாமி, அம்பாள் வீதி உலா வருவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 5.15 முதல் 5.55 சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முன்னதாக இன்று (திங்கட்கிழமை) மதியம் 12 மணிக்கு மேல் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூரில் உள்ள திருக்கோட்டி அய்யனார் கோவிலில் கோவில் யானை "கோமதி" பிடி மண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான மே 3-ந் தேதி (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப்படிகாரர்கள் செய்து வருகின்றனர்.