வழிபாடு

வருடத்தில் இரண்டு முறை கொண்டாடப்படும் சரஸ்வதி பூஜை

Published On 2024-10-12 07:04 GMT   |   Update On 2024-10-12 07:04 GMT
  • சரஸ்வதி தேவிக்கு வெண்மை நிற ஆடை மற்றும் வெண்மை நிற மலர்கள் சமர்ப்பணம் செய்வது வழிபடுவது மரபாக இருக்கிறது.
  • நவராத்திரி என்ற கொலு வைத்து கொண்டாடப்படும் திருவிழா நாட்களில் பத்தாவது நாள் விஜயதசமி என்று சொல்லப்படுகிறது.

சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய பண்டிகை நாட்கள் இந்திய அளவில் அனைத்து மாநில மக்களாலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் சரஸ்வதி பூஜை தேசிய அளவில் இரண்டு முறை கொண்டாடப்படுகிறது.

முதலாவது, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வரக்கூடிய நவராத்திரி பண்டிகையின் ஒன்பதாவது நாளில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை என்றும், அதற்கு அடுத்த பத்தாவது நாளில் விஜயதசமி என்று கொண்டாடப்படுகிறது. இந்த முறை தென்னிந்திய மாநிலங்களில் நடைமுறை வழக்கமாக அமைந்துள்ளது.

இரண்டாவது, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் வரக்கூடிய மாசி மாத சுக்கில பட்ச ஐந்தாம் நாளான வசந்த பஞ்சமி சரஸ்வதி பூஜையாக வட இந்திய மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. அந்த நாள் சரஸ்வதி அவதாரம் செய்த தினம் என்பதால் சரஸ்வதியை வழிபட்டு கல்விச் செல்வத்தை பெறும் வகையில் வீடுகளிலும், கோவில்களிலும், பொது இடங்களிலும் சமுதாய திருநாளாக சரஸ்வதி பூஜை அனுசரிக்கப்படுகிறது.

 

புராணங்களில்படி சரஸ்வதி தேவி மும்மூர்த்திகளில் முதலாவது மூர்த்தியாக சொல்லப்படும் பிரம்மாவின் மனைவியாக குறிப்பிடப்படுகிறார். உலகில் உள்ள அனைத்து வித ஞானங்களுக்கும், கல்விச்செல்வத்திற்கும் ஆதிபத்தியம் பெற்ற தெய்வ அம்சமாக சரஸ்வதி இருக்கிறார் என்பது ஐதீகம். சரஸ்வதி தேவிக்கு வெண்மை நிற ஆடை மற்றும் வெண்மை நிற மலர்கள் சமர்ப்பணம் செய்வது வழிபடுவது மரபாக இருக்கிறது.

சரஸ்வதி தேவியை வாக்தேவி, சாரதா, பாரதி, பிராமி, வீணாவாதினி, வாணி ஆகிய பெயர்களில் அழைக்கிறார்கள். வசந்த பஞ்சமி நாளிலிருந்து அடுத்து வரக்கூடிய 40-வது நாளில் வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகையின் தொடக்கத்தை அங்கீகரிக்கும் வகையிலும் வசந்த பஞ்சமி வட இந்தியாவில் விமரிசையாக அனுசரிக்கப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை நவராத்திரி கொலு வைத்து பூஜைகள் செய்யப்படும் ஒன்பதாவது நாளில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. பத்தாவது நாள் விஜயதசமி என்று சொல்லப்படும். அந்த நாளில் தான் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை நடைபெறும். மேலும், குழந்தைகளுக்கு அவர்களுடைய தந்தை, குடும்ப மூத்தவர்கள், ஆசிரியர்கள் கல்வி கற்றலுக்கான முதல் நாளை தொடங்கி வைக்கிறார்கள்.

நவராத்திரி என்ற கொலு வைத்து கொண்டாடப்படும் திருவிழா நாட்களில் பத்தாவது நாள் விஜயதசமி என்று சொல்லப்படுகிறது. இந்த நாளை கர்நாடகா மற்றும் ஆந்திராவில் தசரா என்று குறிப்பிடுகிறார்கள். அந்த நாட்களில் எந்த ஒரு தொழிலையும், வித்தையையும் கற்பதற்கான நாளாக அனுசரிக்கிறார்கள்.

மேலும் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் குழந்தைகளுக்கு புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் பேனா ஆகியவற்றை பரிசாக வழங்கி அவர்களுக்கு நல்ல கல்வி செல்வம் கிடைப்பதற்கு ஆசிகளையும் வழங்குவது சமூக மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News