இன்று சதுரகிரி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்: ஆடி அமாவாசையையொட்டி ஏற்பாடுகள் தீவிரம்
- இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வருகிறது.
- இந்த முறை 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலை உச்சியில் 3 ஆயிரம் அடிக்கு மேல் அமைந்துள்ள இக்கோவிலுக்கு மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் திரளாக சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இதற்காக வனத்துறை சார்பில் மாதத்தில் மொத்தம் 8 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஆடி, தை, மகாளய அமாவாசை நாட்களில் சதுரகிரிக்கு பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வருகிறது. முதல் அமாவாசை வருகிற 17-ந்தேதியும், 2-வது அமாவாசை ஆகஸ்ட் 16-ந்தேதியும் வருகிறது.
இந்த நிலையில் ஆடி அமாவாசை மற்றும் சனி பிரதோஷத்தை முன்னிட்டு இன்று (15-ந்தேதி) முதல் வருகிற 18-ந்தேதி வரை 4 நாட்கள் சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முதல் நாளான இன்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே மலை அடிவாரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். காலை 6.30 மணிக்கு கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக அவர்களின் உடைமைகளை வனத்துறையினர் சோதனை செய்தனர்.
சனிப்பிரதோஷம் சிறப்பானதாக கருதப்படுவதாலும், அதுமட்டுமின்றி ஆடி அமாவாசையை முன்னிட்டும் இன்று வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதையொட்டி அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை விருதுநகர்-மதுரை மாவட்ட நிர்வாகங்கள் இணைந்து செய்திருந்தன.
மதுரை, விருதுநகர், திருமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இருந்து சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. மலை அடிவாரம் மற்றும் மலையேறும் பாதைகளில் வனத்துறை மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. முன்னதாக பன்னீர், பால், தயிர் உள்ளிட்ட 18 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடந்தன.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மலை அடிவாரத்திலும், மலை மேல் உள்ள கோவில் பகுதியிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
ஆடி அமாவாசைக்கு 2 நாட்களே இருப்பதால் இந்த முறை 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சதுரகிரிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை அரசு அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.