சீர்காழி சட்டைநாதர் கோவில் குடமுழுக்கையொட்டி புனிதநீரை சுமந்து வந்த யானைகள்
- சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது.
- இந்த கோவிலில் 24-ந்தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது.
சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருநிலை நாயகி அம்பாள் பிரம்மபுரீஸ்வரர் உடன் அருள் பாலித்து வருகிறார். மேலும் இந்த கோவிலில் திருஞானசம்பந்தர், அஷ்ட பைரவர்களுக்கு தனி சன்னதி உள்ளது. இக்கோவில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் வருகிற 24-ந் தேதி (புதன்கிழமை) குடமுழுக்கு நடைபெற உள்ளது.
விழாவையொட்டி யாகசாலை பூஜைகள் இன்று (சனிக்கிழமை) மாலை தொடங்க உள்ளது. அதைமுன்னிட்டு தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் சீர்காழி அருகே உள்ள உப்பனாற்றில் இருந்து நேற்று மாலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் மற்றும் நகர எல்லையான உப்பனாற்று ஆகிய நீர்கள் அடங்கிய 4 கடங்களை, நான்கு யானைகள் மீது ைவத்து சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
அப்போது ஒட்டகம், குதிரை, சிலம்பாட்டம், வாத்தியம், மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்து அடைந்தனர். பின்பு கொண்டுவரப்பட்ட புனிதநீரை பாதுகாப்பாக யாகசாலையில் கொண்டு வந்து சேர்த்தனர்.
இந்த நிகழ்வில் தருமபுரம் ஆதீனத்தை சேர்ந்த பல்வேறு கட்டளை தம்பிரான்கள், தமிழ் சங்கத் தலைவர் மார்கோனி, பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., திருப்பணி உபயதாரர் முரளி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரபாகரன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் பந்தல் முத்து, கோவி நடராஜன், பாலசுப்பிரமணியன், நகர்மன்ற உறுப்பினர் பாலமுருகன், வர்த்தக சங்க நிர்வாகி பாலகிருஷ்ணன், கோவில் நிர்வாகி செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.