வழிபாடு

காவிரி ஆற்றுக்கு நடுவே சிவன் கோவில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம்...

Published On 2023-10-05 04:40 GMT   |   Update On 2023-10-05 04:40 GMT
  • அகத்தியரால் வழிபடப்பட்டவர் ஆதலால் அகத்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
  • ஈரோட்டில் இருந்து 15 கி.மீ தொலைவில் தீவு அமைந்துள்ளது.

கரைபுரண்டோடும் காவிரி, அதன் நடுவே பிரணவ உருவாய் திகழும் சிவாலயம். இங்ஙனம் ஆற்றின் நடுவில் கோவில் கொண்டிருப்பதால் நட்டாற்றீஸ்வரர் என்றும், அகத்தியரால் வழிபடப்பட்டவர் ஆதலால் அகத்தீஸ்வரர் என்றும் திருப்பெயர்களை ஏற்றுத்திகழ்கிறார் சிவபிரான்.

ஈரோட்டில் அமைந்துள்ள இந்த தீவின் பெயர் நட்டாற்றீஸ்வரர் தீவு. ஈரோட்டில் இருந்து 15 கி.மீ தொலைவில் இந்த தீவு அமைந்துள்ளது. கடல் போல் காட்சியளிக்கும் காவிரி ஆற்றின் நீருக்கு நடுவே அமைந்துள்ள இந்த குட்டி தீவின் நடுவே சிவன் கோவில் ஒன்றும் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் உள்ள சிவபெருமான் நட்டாற்றீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இந்த கோவில் கிட்டத்தட்ட 3000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. 10-ம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படும் இந்த கோவிலுக்கு முதலில் பரிசல் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது கரையில் இருந்து கோயிலுக்கு செல்ல பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் எளிதில் செல்ல முடியும்.

கோயிலின் வரலாறு

இந்த கோவில் குறித்து பழங்கால புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி அகத்திய முனிவர் தனது பாவங்களைப் போக்க ஒரு சிவலிங்கத்தை உருவாக்கினாராம். மணலால் செய்யப்பட்ட இந்த சிவலிங்கம் காவேரி ஆற்றின் மையத்தில் ஒரு குன்றின் மீது வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அகத்தியர் தனது ருத்ராட்ச மாலையை மலையை சுற்றி வைத்துவிட்டு தனது தவத்தை தொடங்கினார்.

சித்திரை முதல் நாள் அவர் எந்த தொந்தரவும் இல்லாமல் தவம் செய்துள்ளார். ஆனால் தமிழ் புத்தாண்டு அன்று சில இடையூறுகளால் கண்விழித்த அவர் தனது தவத்தை முடித்துக் கொண்டாராம். பின்னர் அவர் தனது ருத்ராட்ச மாலையை லிங்கத்தில் இருந்து அகற்ற முயன்றார். பின்னர் சிவபெருமானின் தெய்வீக குரலை கேட்டாரம். அப்போது சிவபெருமான் தனது லிங்கத்தைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும், அது நிரந்தரமாக அங்கேயே இருக்கும் என்று கூறினாராம்.

அகத்தியரையும், அங்கு வந்த அனைத்து பக்தர்களையும் ஆசீர்வதிக்க தோன்றியதாகவும் கூறினாராம். எனவே, இந்த புராணத்தின் படி சிவபெருமான் ஈரோடு நகரில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். பின்னர் அகத்திய முனிவர் தனது எஞ்சிய பணியை முடிக்க தெற்கில் பல்வேறு இடங்களுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

ஏறக்குறைய 3000 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் நட்டாற்றீஸ்வரர் கோவிலைக் கட்டி, கோவிலில் சிவ லிங்கத்தை நிறுவினர். இங்குள்ள லிங்கத்திற்கு அகஸ்தீஸ்வரர் என்று பெயர். இந்த கோவிலுக்குள் அமைந்துள்ள அத்தி மரத்தை பக்தர்கள் காணலாம். இது 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என நம்பப்படுகிறது. தமிழ் புத்தாண்டு தினத்தன்று ஈரோடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.

எப்படி செல்வது?

ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து கரூர் செல்லும் பேருந்தில் ஏறி சாவடிப்பாளையம் என்ற ஊரில் இறங்க வேண்டும். அங்கிருந்து ஆட்டோ மூலம் 2 கி.மீ தொலைவில் உள்ள இந்த கோவிலுக்கு செல்லலாம். மேலும் காவிரி ஆற்றங்கரையில் இருந்தும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மற்ற ஆற்றங்கரைகளில் இருந்தும் பரிசல் சேவைகள் இக்கோயிலுக்குச் செல்லலாம். எனவே வாய்ப்புள்ளவர்கள் இந்த அழகான தீவு கோவிலுக்கு செல்வது நிச்சயம் நல்ல அனுபவத்தை தரும்.

Tags:    

Similar News