வழிபாடு

துயரங்களை தீர்க்கும் சொர்ணகடேஸ்வரர்

Published On 2024-10-25 03:18 GMT   |   Update On 2024-10-25 03:18 GMT
  • வெண்ணெய் காப்பு சாத்தி வழிபட்டால், பாவங்கள் நீங்கும்.
  • சிவனுக்கு சாத்தப்படும் வெண்ணெய் காப்பு மறுநாள் வரை உருகாமல் இருக்கிறது.

கோவில் தோற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது, திருநெய்வணை என்று அழைக்கப்படும் திருநெல்வெண்ணெய் திருத்தலம். இவ்வாலயத்தின் இறைவன் 'சொர்ணகடேசுவரர்' என்றும், இறைவி 'நீலமலர்கன்னி' என்றும் அழைக்கப்படுகின்றனர். ஆலய தீர்த்தம், பெண்ணெயாறு. ஆலய தல விருட்சம், புன்னை மரம்.


தல வரலாறு

முன்னொரு காலத்தில் வயல்கள் நிறைந்த இப்பகுதியில் விவசாயம் செழித்திருந்தது. அதனால் மக்கள் அனைவரும் குறைவில்லாத வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். வசதியான வாழ்க்கை காரணமாக, ஒழுக்கம் தவறியதுடன் இறை வழிபாட்டையும் முழுமையாக மறந்தனர்.

அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணிய சிவன் ஒரு திருவிளையாடல் நிகழ்த்தினார். வருணனிடம் சொல்லி இப்பகுதியில் மட்டும் இடைவிடாத தொடர்மழை பொழியும்படி செய்தார். முதலில் மழையை கொண்டாடியவர்கள், விடாத மழையால் திண்டாடினர்.

தொடர்ந்து பெய்த மழையால் ஊருக்கு மத்தியில் இருந்த பெரிய ஏரி உடைந்து, ஊருக்குள் வெள்ளம் பாய்ந்தது. விவசாய பயிர்கள் அழிந்தன.

அடுத்தகட்டமாக தங்களது உடமைக்கும், உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்பதை புரிந்தவர்கள், அதுநாள் வரை மறந்திருந்த இறைவழிபாட்டை நினைத்து, ஒன்றுகூடி சிவபெருமானை தொழுதனர்.

இதையடுத்து ஒரு வாலிபன் உருவில் அங்கு வந்த சிவபெருமான், ஒவ்வொருவர் வீட்டிலும் வைத்திருந்த நெல் மூட்டைகளை கேட்டுப் பெற்றார். அந்த நெல் மூட்டைகளைக் கொண்டு, ஏரியின் கரையை பலப்படுத்தி வெள்ளத்தைத் தடுத்தார்.

பின்னர் வருணபகவானை அழைத்து மழையை நிறுத்தும்படி பணித்தார். தக்க சமயத்தில் வந்து தங்கள் உடமைகள், பொருள்களை காத்ததுடன், அனைவரின் உயிரையும் காத்த அந்த வாலிபனிடம், "நீதான் எங்கள் தெய்வம்" என்று மகிழ்ச்சியுடன் கூறினர்.

அப்போது வாலிபனாக இருந்த சிவபெருமான், "உங்களின் அனைத்து உயர் நிலைக்கும் இறைவனே காரணம். இனிமேல் எந்த சூழ்நிலையிலும் நல்வழியை கைவிடாதபடி வாழுங்கள். அதோடு இறைவனையும் மறக்காதிருங்கள்" என்று கூறினார்.

மேலும் சொர்ணம் நிரம்பிய குடங்களை அனைத்து வீடுகளுக்கும் கொடுத்து, 'இழந்த பொருட்களை இதன் மூலம் மீட்டுக்கொள்ளுங்கள்' என்று கூறி அனைவருக்கும் தான் யார் என்பதை காட்டி மறைந்தார்.

பரவசம் அடைந்த மக்கள் அனைவரும் அந்த இறைவனுக்கு அங்கே ஒரு ஆலயம் எழுப்பினர். சிவனே வந்து நெல் மூட்டைகளைக் கொண்டு அணை கட்டிய தலம் என்பதால், இந்த ஊர் 'நெல் அணை' என்று அழைக்கப்பட்டு, அதுவே மருவி காலப்போக்கில் 'நெய்வணை' என்றானதாக சொல்கிறார்கள்.

இத்தல இறைவனுக்கு 'நெல்வணை ஈசர்' என்றும், 'பொற்குடநாதர்' என்றும் பெயர்கள் உண்டாயின. இத்தல ஈசனை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தங்களின் தேவாரப் பாடலால் போற்றியுள்ளனர்.

2 ஆயிரம் ஆண்டு பழமையும், பெருமையும் கொண்ட இக்கோவில் யாரால் கட்டப்பட்டது என்ற குறிப்பு இல்லை. ஆனால் சோழமன்னர்களில் முதலாம் குலோத்துங்கசோழன், விக்கிரமசோழன், பல்லவமன்னர் சகலபுவன சக்கரவர்த்தி கோப்பெருஞ்சிங்கதேவர், விஜயநகர மன்னர் கிருட்டிணதேவ மகாராயர் ஆகியோரால் இவ்வாலயத்திற்கு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது.


ஆலய அமைப்பு

ஆலயத்தின் முன்பாக திருக்குளம் உள்ளது. முகப்பு வாசல், அதற்கு முன்பாகவே நந்தி, கொடிமரம், பலிபீடம் உள்ளன. கோவிலின் உள்ளே மகா மண்டபம், அதில் பலிபீடம், நந்தியம்பெருமான் இருக்கின்றனர். இந்த அதிகார நந்தி இரண்டு கால்களையும் இணைத்து கைகூப்பி வணங்குவது போன்ற அமைப்பில் இருக்கிறது.

இடதுபுறமாக விநாயகர் அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னிதியின் வாசலுக்கு வெளியே, திருமகளுடன் சங்கு-சக்கரம் ஏந்தியபடி திருமால் வீற்றிருக்கிறார்.

அர்த்த மண்டபத்தில் துவாரபாலகர்கள் காவல்புரிய, கருவறையில் மூலவரான நெல்வணை நாதர், சுயம்பு மூர்த்தியாக சிவலிங்க வடிவத்தில் ருத்ராட்ச பந்தலின் கீழ் அருள்கிறார். பிரமாண்டமான இந்த பந்தலில் 7 ஆயிரத்து 500 ருத்ராட்சங்கள் இருக்கிறது.

சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நால்வரும் சுவாமியை வணங்கிய நிலையில் உள்ளனர். அர்த்த மண்டபத்தில் நடராஜருக்கு தனிச் சன்னிதியும், உற்சவருக்கான சன்னிதியும் உள்ளன. சூலத்தின் மத்தியில் நின்ற கோலத்தில் உற்சவர் அருள்பாலிக்கிறார்.

சிவமும் சக்தியும் இணைந்த அர்த்தநாரீசுவரர் வடிவத்தை இந்த வடிவம் உணர்த்துகிறது. கருவறைக் கோட்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தி, கிழக்கில் லிங்கோத்பவர், வடபுறத்தில் துர்க்கை, பிரம்மா வீற்றிருக்கின்றனர். அவர்களுக்கு எதிரில் சண்டிகேசுவரர் சன்னிதி உள்ளது.

தென்கிழக்கில் செல்வ விநாயகர், தொடர்ந்து வள்ளி- தெய்வானை உடனாய சுப்பிரமணியர் வீற்றிருக்கின்றனர். அடுத்ததாக மகாவிஷ்ணு, கைகூப்பிய கோலத்தில் இருக்கும் மகாலட்சுமியை இடது மடியில் அமர்த்தியபடி லட்சுமி நாராயணராக தனிச் சன்னிதியில் அருள்கிறார்.


இவர்கள் இருவரும் கண்களை மூடி தியானத்தில் இருப்பது தனிச்சிறப்பு. இந்தச் சன்னிதிகளுக்கு பின்புறம் பாலமுருகனும், விசாலாட்சி உடனாய விசுவநாதரும் உள்ளனர். அம்பாள் சன்னிதி, தனிக்கோவிலாக அமைந்திருக்கிறது. நீலமலர்கன்னி அம்மன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

இவ்வாலய மூலவருக்கு வெண்ணெய் காப்பு சாத்தி வழிபட்டால், பாவங்கள் நீங்கும், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. சிவனுக்கு சாத்தப்படும் வெண்ணெய் காப்பு மறுநாள் வரை உருகாமல் இருக்கிறது.


மறுநாள் அந்த வெண்ணெயை பக்தர்களுக்கு வழங்க, அவர்கள் வீட்டில் விளக்கேற்றுவதற்கு பயன்படுத்துகின்றனர். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கபட்டிருக்கும்.

அமைவிடம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, திருநெய்வணை திருத்தலம்.

Tags:    

Similar News