- பித்ருக்களுக்குக் கிடைக்க வேண்டிய உணவு கிடைக்காமல் போகும்.
- நமது முன்னோர்களின் ஆத்மாக்கள், ஒன்று சேர்ந்து, நம்மை ஆசீர்வதிக்கும்
நமது முன்னோர்கள் யாராவது முக்தி அடைந்திருந்தால், நமது சிரார்த்தத்தின் பலனை அந்த இறைவனே ஏற்று அருள் புரிகிறார். பொதுவாக, நாம் செய்யும் தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றின் புண்ணிய பலன், சேமித்து வைக்கப்பட்டு, தக்க நேரத்தில் நம்மை வந்தடையும்.
ஆனால், மகாளய பட்சத்தில், நமது முன்னோர்களின் ஆத்மாக்கள், ஒன்று சேர்ந்து, நம்மை ஆசீர்வதிக்க வருவதால், அந்த நேரத்தில் செய்யும் சிரார்த்த கர்மாக்களின் பலன்கள், உடனடியாக அவர்களிடம் சேர்ப்பிக்கப்பட்டு, பலனும் உடனடியாக நமக்குக் கிடைத்து, நம் தீராத, நாள்பட்ட பிரச்சினைகள் உடனடியாகத் தீர்வுக்கு வருவதை நம் கண்முன் காணலாம். இது மகாளய அமாவாசை வழிபாட்டின் தனிசிறப்பு.
இந்த மகாளய பட்சத்தில், ஒருவர், மறைந்த, தம் தாய் தந்தையர், தாத்தா, பாட்டி ஆகியோர்களுக்கு மட்டுமில்லாமல், குழந்தை இன்றி இறந்து போன தம் தாயாதிகளுக்கும் சேர்த்துத் தர்ப்பணம் செய்யலாம். அதன் பலனாக அவர்களின் ஆசிகளையும் பெறலாம்.
மிகுந்த தெய்வ பக்தி உடையவர்கள், வேதம், தமிழ் மறைகள் ஓதியவர்கள், நீதி நேர்மையுடன் வாழ்ந்தவர்கள், பித்ரு சரீரம் அடையும் போது, மிகுந்த நன்மை செய்பவர்களாகிறார்கள். அவர்களுடைய சரீரம் ஒளி பொருந்தியது. அவர்களுக்குச் செய்ய வேண்டிய சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவற்றைச் சரியாகச் செய்யும் போது, குடும்பத்தில் இருக்கும் தீராத நோய், கடன், பகை, எதிர்பாராத விபத்துக்கள், குழந்தையின்மை போன்ற பல பிரச்சினைகள் நீங்குகின்றன. மாறாக, இது தவிர்க்கப்பட்டால், தலைமுறைகள் தாண்டியும் பிரச்சினைகள் தொடரும்.
இறைவழிபாட்டின் மூலம் கிடைக்கும் வரங்களை, பித்ரு சாபம் தடுக்கும் வல்லமையுடையது. ஆனால் நமது முன்னோர்கள் ஒரு போதும் நம்மைச் சபிக்க மாட்டார்கள். இப்பூவுலகில், ஒருவர் செய்ய வேண்டிய சிரார்த்தம் தடைபட்டால், அதனால், பித்ருக்களுக்குக் கிடைக்க வேண்டிய உணவு கிடைக்காமல் போகும். அதனால் அவர்கள் அடையும் இன்னலே சாபமாக மாறி நம்மை அடைகிறது.