ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் நாக சதுர்த்தி உற்சவம்: பாம்பு புற்றுக்கு பால் ஊற்றி வழிபாடு
- பக்தர்கள் புனித நீராடி கோவில்களுக்கு சென்று அங்குள்ள பாம்பு புற்றுக்கு பால் ஊற்றினர்.
- பாம்பு புற்றுக்கு வஸ்திரம் சமர்ப்பித்து நெய் தீபம், கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று நாகசதுர்த்தி உற்சவம் நடந்தது. அதையொட்டி அதிகாலையில் பக்தர்கள் புனித நீராடி கோவில்களுக்கு சென்று அங்குள்ள பாம்பு புற்றுக்கு பால் ஊற்றினர். முட்டைகளை வைத்தனர். பின்னர் அங்குள்ள நாகர் சிலைகளுக்கு சிறப்புப்பூஜைகள் செய்து, தேங்காய் உடைத்து, பாம்பு புற்றுக்கு வஸ்திரம் சமர்ப்பித்து மஞ்சள், குங்குமம் தூவி, மாவிளக்கு, நெய் தீபம், கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வளாகத்தில் உள்ள 3-ம் கோபுரம் எனப்படும் திருமஞ்சன கோபுரம் அருகில் உள்ள நாகர் சிலைகளுக்கு சிவன் கோவில் சார்பில் வேத பண்டிதர்கள் தலைமையில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தி நாக தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டனர்.