தமிழ்நாடு

சுவாமிமலை கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Published On 2024-12-04 05:12 GMT   |   Update On 2024-12-04 05:12 GMT
  • யானை வாகனம், காமதேனு வாகனம், வெள்ளிக் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா காட்சி நடைபெறுகிறது.
  • தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சியும், தீபக்காட்சியும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

சுவாமிமலை:

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டு திருவிழா இன்று (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு அணுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, நாளை (வியாழக்கிழமை) காலை கொடியேற்றம் நடக்கிறது.

தொடர்ந்து, விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர் பரிவாரங்களுடன் மலைக்கோவிலில் இருந்து உற்சவ மண்டபம் எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு யாகசாலை பூஜை, சுவாமி வீதிஉலா திக் பந்தனம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

அதனைத் தொடர்ந்து, 8 நாட்கள் படிச்சட்டத்தில், ஆட்டுக்கிடா வாகனம், பஞ்சமூர்த்திகள் சப்பரம், யானை வாகனம், காமதேனு வாகனம், வெள்ளிக் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா காட்சி நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்வான திருக்கார்த்திகை தினத்தன்று (13-ந்தேதி) காலை 9 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சியும், தீபக்காட்சியும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

பின்னர், 14-ந்தேதி படிச்சட்டத்தில் சுப்பிரமணிய சுவாமி புறப்பட்டு காவிரியில் தீர்த்தவாரியும், இரவு அவளோ அவரோஹணம் படிச்சட்டத்தில் சுவாமி புறப்பாடும், 15-ந்தேதி இரவு வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி யதாஸ்தானம் சேர்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவிலின் இந்து சமய அறநிலை துறை இணை ஆணையர் சிவகுமார், துணை ஆணையர் உமாதேவி மற்றும் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News