தமிழ்நாடு

வங்கதேச இந்துக்களுக்கு ஆதரவாக போராட்டம்- தமிழிசை உள்பட இந்து அமைப்பினர் 500 பேர் கைது

Published On 2024-12-04 09:12 GMT   |   Update On 2024-12-04 09:51 GMT
  • தொண்டர்கள் வரவர வலுக்கட்டாயமாக பிடித்து பஸ்களில் ஏற்றினார்கள்.
  • ஆர்ப்பாட்டத்தில் பேசுவதற்காக ஒலிபெருக்கிகளும் வைக்கப்பட்டிருந்தன.

சென்னை:

வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறை தாக்குதல்கள், சொத்துக்களை சூறையாடுதல் போன்ற சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்தும், வங்கதேசத்தில் சிறுபான்மை யினராக வாழும் இந்துக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்க கோரியும் வங்கதேச இந்து உரிமை மீட்பு இயக்கம் சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, பா.ஜனதா, விசுவ இந்து பரிஷத், ஏ.பி.வி.பி. உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டார்கள்.

முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜனதா அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன், துணை தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் சுமதி வெங்கடேஷ், மாவட்ட தலைவர்கள் தனசேகரன், கிருஷ்ணகுமார், மனோகர், சாய் சத்யன், காளிதாஸ், மாவட்ட பொதுச் செயலாளர் லதா சண்முகம் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் நடத்த இருந்த இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு கட்ட இருந்த பேனரை கட்டவிடாமல் தடுத்ததோடு ஆர்ப்பாட்டம் நடத்தாமல் தடுப்பதில் போலீசார் குறியாக இருந்தனர்.

தொண்டர்கள் வரவர வலுக்கட்டாயமாக பிடித்து பஸ்களில் ஏற்றினார்கள். அங்கு யாரையும் கூடுவதற்கே அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த தொண்டர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் எதைப் பற்றியும் கண்டு கொள்ளாமல் அனைவரையும் பிடித்து சென்றனர். ஆர்ப்பாட்டத்தில் பேசுவதற்காக ஒலிபெருக்கிகளும் வைக்கப்பட்டிருந்தன.

டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், கேசவ விநாயகன், கரு.நாகராஜன் உள்பட இந்து அமைப்பினர் சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சுவாமி சிவானந்தா சாலை மற்றும் எழும்பூரில் உள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளர்கள்.

திருவள்ளூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News