முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் திமுக அரசு- இபிஎஸ் குற்றச்சாட்டு
- ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், முகாம்களில் இருந்து மக்களை திமுக அரசு வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண்டபங்கள் , முகாம்களாக மாற்றப்பட்டு, வீடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், முகூர்த்தம் போன்ற பல்வேறு காரணங்களைக் கூறி மக்களை வலுக்கட்டாயமாக திமுக அரசு முகாமிலிருந்து வெளியேற்றி வருவதாக செய்திகள் வருகின்றது.
ஏற்கனவே புயலின் தாக்கத்தால் மனதைப் பிழியும் சொல்லொண்ணா துயரில் உள்ள மக்களை, உணவு, குடிநீர் ஆகியவற்றின் தட்டுப்பாட்டால் நடுரோட்டில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளியிருக்கிறது இந்த விடியா திமுக அரசு.
வயிற்றுபசிக்காகவும், நிவாரணத்திற்காகவும் தங்களை நடுரோட்டிற்கு வந்து போராட வைத்த இந்த விடியா திமுக அரசை மக்கள் மன்னிக்கவோ, மறக்கவோ மாட்டார்கள்.
பேரிடர் காலங்களில் மக்களுக்கான உரிய குடிநீர், உணவு, உறைவிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளைக் கூட ஒழுங்காக நிறைவேற்ற முடியாத நிர்வாகத் திறனற்ற திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
இயல்புநிலை திரும்பும் வரை மக்களுக்கான அனைத்து தேவைகளையும் தடையின்றி கிடைத்திட உறுதி செய்யுமாறு மு.க.ஸ்டாலினி-ன் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.