ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலில் மாசி மகப்பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- நாளை தங்க கருட சேவை நடைபெற உள்ளது.
- 7-ந்தேதி தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது.
ஸ்ரீமுஷ்ணத்தில் பிரசித்தி பெற்ற பூவராகசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசிமகப்பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலையில் கோவில் நடைதிறக்கப்பட்டு, மூலவர் பூவராகசுவாமி, அம்புஜவல்லித் தாயார், உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத யக்ஞவராக சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் உற்சவர் யக்ஞவராகசாமி சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, விழாக்கான கொடியேற்றப்பட்டது.
தொடர்ந்து புஷ்ப விமானத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது. இதில் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி மன்ற தலைவி செல்வி ஆனந்தன், முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் முத்துராமலிங்கம், ஆனந்த.பார்த்திபன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் தினசரி சாமிக்கு சிறப்பு பூஜையும், இரவில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலாவும் நடைபெற்று வருகிறது. மேலும் நாளை(புதன்கிழமை) இரவு தங்க கருட சேவை நடைபெற உள்ளது. 5-ந்தேதி காலை தங்க தோளுக்கினியாளில் சுவாமி புறப்பாடாகி, சேத்தியாத்தோப்பு தீப்பாய்ந்த நாச்சியார் கோவிலில் தங்குதல், 6-ந்தேதி காலை கிள்ளை தீர்த்தவாரிக்கு சாமி புறப்பாடு, 7-ந்தேதி மதியம் 12 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.
பின்னர் 8-ந்தேதி மகத்துவாழ்க்கை மண்டகப்படியும், இரவு தில்லைவிடங்களில் தங்கல், 9-ந்தேதி மேலமூங்கிலடி மண்டகப்படி, திருமஞ்சனம், இரவு தங்குதல், 10-ந்தேதி கீழ்புவனகிரி சவுராஷ்டிரர்கள் பஜனைமட திருமஞ்சனம், 12-ந்தேதி புவனகிரி அக்ரஹார தெரு திருமண்டபம், இரவு முத்து பல்லக்கில் கடைவீதிக்கு புறப்பாடு, 13-ந்தேதி புவனகிரி கடைவீதி மண்டகப்படி, திருமஞ்சனம், 14-ந்தேதி குமாரக்குடி தீபாராதனை, கானூர் புறப்பாடு நடைபெறுகிறது.
15-ந்தேதி பாளையங்கோட்டை புறப்பாடு, திருமஞ்சனம், மண்டகப்படி, 16-ந்தேதி பாளையங்கோட்டையில் இருந்து புறப்பட்டு ராமாபுரத்தில் மதியம் திருமஞ்சனமும், இரவு முத்துப்பல்லுக்கும் நடைபெறும். 17 -ந்தேதி ராமாபுரத்தில் இருந்து வழிநடை தீபாராதனை முடித்து கவரப்பாளையம் புறப்பாடு, 18-ந்தேதி தங்கப்படி சட்டம், இரவு பல்லக்கு உற்சவம், 19-ந்தேதி கவரப்பாளையத்தில் இருந்து ஸ்ரீமுஷ்ணம் எல்லைக்கு எழுந்தருளுதல் 20-ந்தேதி காலையில் ஸ்ரீமுஷ்ணம் எல்லையில் இருந்து கோவிலுக்கு எழுந்தருளல், 21-ந்தேதி திருமஞ்சனம் நடைபெற்று கொடி இறக்கப்பட்டு விமான வீதி புறப்பாட்டுடன் விழா நிறைவடைகிறது.
இதற்கான ஏற்பாடுகளை தக்கார் மாலா, கோவில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் செல்வமணி, அர்ச்சகர்கள் ராமானுஜம், ராஜாமணி, ஆலய சிப்பந்திகள் பூவராகமூர்த்தி மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.