அவதார திருவிழா: ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோவிலில் தேரோட்டம்
- ராமானுஜர் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
- ஸ்ரீராமானுஜர் தானுகந்த திருமேனியாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
ஸ்ரீபெரும்புதூரில் பிரசித்தி பெற்ற பழமையான ஸ்ரீஆதிகேசவ பெருமாள் ஸ்ரீராமானுஜர் கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீராமானுஜர் தானுகந்த திருமேனியாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பெருமாளுக்கு 10-நாள் பிரம்மோற்சவமும், ஸ்ரீராமானுஜருக்கு 10 நாள் அவதார திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஸ்ரீராமானுஜரின் 1006-வது ஆண்டு அவதார திருவிழா கடந்த 16-ந் தேதி தொடங்கியது. யானை, குதிரை, சூரிய பிரபை உள்ளிட்ட வாகனங்களில் ஸ்ரீராமானுஜர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருவிழாவின் 9-வது நாளான இன்று காலை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. காந்தி சாலை, திருமங்கை ஆழ்வார் சாலை வழியாக ராமானுஜர் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஸ்ரீஆதிகேசவ பெருமாள் பிரம்மோற்சவ விழா மே 4-ந் தேதி துவங்கி 13-ந் தேதி வரை 10-ம் நாள் நடை பெறுகிறது. பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான வருகிற 10-ந் தேதி காலை தேர் விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.