வழிபாடு

பெருமாளுக்கும் தாயாருக்கும் இடையே ஏற்பட்ட ஊடலும்... வரலாறும்...

Published On 2023-01-17 07:58 GMT   |   Update On 2023-01-17 07:58 GMT
  • பங்குனி உத்திர நாளில் ஸ்ரீரங்கத்தில் மட்டையடி உற்சவம் நடைபெறுகிறது.
  • பெருமாளுக்கும் தாயாருக்கும் அப்படி என்ன ஊடல்? அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்க நாதர் ஆலயத்தில் நடக்கும் விழாக்களில் மிக முக்கியமான பெருவிழா, பங்குனி உத்திரம் திருவிழா தான். பிரம்மா இவ்விழாவைக் கொண்டாடியதால் இது ஆதி பிரம்மோற்சவம் எனப்படுகிறது. இன்னொரு சிறப்பு என்னவென்றால் பெருமாளுக்கும் தாயாருக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு, அவர்கள் பிரிந்திருந்து மீண்டும் இருவரும் இணைந்தது ஒரு பங்குனி உத்திர நன்னாளில்தான்.

பெருமாளுக்கும் தாயாருக்கும் ஊடல் என்பது ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே நடை பெறும் பாசப் போராட்டம் என்பார்கள். அதாவது, ஜீவாத்மா வான மனைவியும், பரமாத்மாவான கணவனும் தங்களுக்குள் நிகழ்கிற ஊடல்களைப் பெரிது படுத்தாமல் அனைத்தையும் மறந்து, அனுசரித்து இணைந்து வாழ்ந்தால்தான் பேரின்பத்தை அடைய முடியும் என்னும் தத்துவத்தை இது விளக்குகிறது.இந்தக் கருத்தை உலக மக்களுக்கு உணர்த்தும் வகையில் பங்குனி உத்திர நாளில் ஸ்ரீரங்கத்தில் மட்டையடி உற்சவம் நடைபெறுகிறது.

சரி, பெருமாளுக்கும் தாயாருக்கும் அப்படி என்ன ஊடல்? அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.

திருச்சியில் உள்ள உறையூரைத் தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்தான் ஒரு சோழ மன்னன். அந்த சோழனுக்கு குழந்தை பாக்கியமில்லை. அந்தக் குறையை போக்க மகாலட்சுமி தாமரை மலரில் அவதரித்தார். அதனால் அவள் கமலவல்லி ஆனாள். அவளை ரெங்க நாதர் திருமணம் செய்தார். உறையூரில் கமலவல்லி நாச்சியார் என்ற பெயரில் கோவிலும் அமைந்துள்ளது.

தாயாரின் திருநட்சத்திரம் -ஆயில்யம். எனவே, பங்குனியில் ஆயில்ய நட்சத்திர நன்னாளில் ரெங்கநாதர் உறையூருக்கு வருவார். அவருடன் கமலவல்லி நாச்சியார் சிம்மாசனத்தில் திருக்காட்சி தருவார். உறையூரில் நாச்சியாருடன் வீதிவுலா வந்து விட்டு, பின்னர் ஸ்ரீரங்கம் ஆலயத்துக்கு வருவார் ரெங்கநாதர்.

பெருமாளைக் காணாமல் அவரின் வருகைக்காக காத்திருப்பார் ரெங்கநாயகித் தாயார். பெருமாள் எங்கு சென்று விட்டு வருகிறார் என்பதனை அறிந்து, கோபத்துடன் புளித்த தயிர், வெண்ணெய், பழங்கள், காய்கறிகளை பெருமாள் மீது வீசியெறிவார். பெருமாள் தன்னைப் பார்க்க வரக்கூடாது என தடைகள் செய்வார் பிராட்டியார்.

இந்தப் பிணக்கை தீர்த்து வைக்கிறார் நம்மாழ்வார்.பெருமாள் தாயாரிடம் சொல்லி மன்னிப்பு கேட்க, தாயாரும் சமாதானம் ஆகிறார். பிறகு பெருமாளும் தாயாரும் அருகருகே கல்யாண கோலமாய் எழுந்தருளி சேர்த்தி என்னும் சேவை சாதிப்பர். இந்த சேவை, ஆலயத்தின் 5-வது திருச்சுற்றில் பங்குனி உத்திர மண்டபத்தில் நடக்கும். இவ்விழாவைக் காண்பவர்களுக்கு திருமணப்பேறு உண்டாகும். இந்த வைபவத்தைக் காணும் பக்தர்கள், களத்திர தோஷத்திலிருந்து விடுபட்டு திருமண வரம் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

பங்குனி உத்திர நாளன்று காலையில் நடைபெறும் இந்த வைபவத்தைக் கண்குளிரத் தரிசித்தால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர் என்பது ஐதீகம். இணைந்து வாழ்ந்து வருகிற தம்பதிகள், மேலும் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டு கருத்தொற்றுமையுடன் வாழ்வார்கள் என் பது நம்பிக்கை.

பூ முடித்தல், தாலிக்குப் பொன்னுருக்குதல், திருமண ஓலை எழுதுதல், சீமந்தம், புதிய பொருள்கள் வாங்குதல், புதிய சிகிச்சை மேற்கொள்ளுதல், புதிய கோயிலில் சிலைகள் பிரதிஷ்டை செய்தல், செடி நடுதல், வணிகம் தொடங்குதல், வேலையில் சேருதல், புதிய இடத்துக்கு மாறுதல், நீர் நிலைகளை உருவாக்குதல், போர்ப்பயிற்சி மேற்கொள்ளுதல் போன்ற நற்காரியங்கள் செய்வதற்கு உகந்த நாள் பங்குனி உத்திரத்திரு நாள்.

எண்ணற்ற பல மங்களகரமான, தெய்வீக நிகழ்வுகள் நடைபெற்ற பங்குனி உத்திரத்திரு நாளில் நாமும் இறைவனை வழிபட்டு சகல நன்மைகளையும் பெறுவோம்.

Tags:    

Similar News