ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவம்: நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினார்
- நாளை நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.
- 15-ம்தேதி ரெங்கநாதர் திருமேனிக்கு இந்த ஆண்டுக்கான இரண்டாவது தைலக்காப்பிடப்படும்.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி-புரட்டாசி மாதங்களில் பவித்ர உற்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் மிக சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பவித்ர உற்சவம் கடந்த 6-ந் தேதி தொடங்கியது. வருகிற 14-ந் தேதி வரை நடைபெறும் இந்த உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்திற்கு அருகில் உள்ள பவித்ர உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.
உற்சவத்தின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு கொட்டார வாசல் எதிரே உள்ள கருடமண்டபத்திற்கு இரவு 7.30 மணியளவில் வந்தடைந்தார். அங்கிருந்தவாறு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
விழாவின் நிறைவு நாளான நாளை(புதன்கிழமை) காலை 10 மணியளவில் நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார். மறுநாள் பெரிய பெருமாள் ரெங்கநாதர் திருமேனிக்கு இந்த ஆண்டுக்கான இரண்டாவது தைலக்காப்பிடப்படும். பவித்ர உற்சவ நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.