வழிபாடு

நம்பெருமாள் வசந்த உற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு

Published On 2022-06-15 03:56 GMT   |   Update On 2022-06-15 03:56 GMT
  • வசந்த மண்டபத்திலிருந்து நம்பெருமாள் இரவு 12 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
  • மஞ்சள் பொடியினை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி இரவு நடைபெற்றது.

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி நம்பெருமாள் தினமும் மாலை வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் 7-ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் கோவில் கொட்டாரத்திற்கு எதிரே உள்ள மண்டபத்தில் எழுந்தருளி நெல்லளவு கண்டருளினார்.

வசந்த உற்சவத்தின் 9-ம் நாளான நேற்று நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 7 மணிக்கு சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு வசந்த மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு இரவு 8.30 மணி முதல் இரவு 10.30 மணிவரை திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் வசந்த மண்டபத்திலிருந்து நம்பெருமாள் இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

வசந்த உற்சவத்தின் போது 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும் மஞ்சள் பொடியினை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நடைபெற்றது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News