கோட்டார் சவேரியார் பேராலயத்தில் 4 தேர்கள் பவனி: திரளானவர்கள் பங்கேற்பு
- சவேரியாரின் பெருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது.
- இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலய 10 நாள் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் நடைபெற்று வருகிறது. மேலும் 8-ம் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு தேர் பவனி நடந்தது.
இதை தொடர்ந்து 9-ம் நாள் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை திருப்பலியும், மாலையில் சிறப்பு மாலை ஆராதனை மற்றும் நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றது. இதற்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றினார். இதனையடுத்து இரவு 10.30 மணிக்கு தேர் பவனி நடந்தது. காவல் தூதர், புனித செபஸ்தியார், புனித சவேரியார் மற்றும் மாதா ஆகிய 4 தேர்கள் மேள தாளங்கள் முழங்க பவனியாக கொண்டு செல்லப்பட்டன.
தேர் பவனி நடந்த போது பக்தர்கள் கும்பிடு நமஸ்காரம் மற்றும் உருண்டு சென்று நேர்த்தி கடன் செலுத்தினார்கள்.
இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேர்களுக்கு முன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
விழாவின் 10-ம் நாள் திருவிழா இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 6 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் புனித சவேரியாரின் பெருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. 8 மணிக்கு திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேரருட்பணியாளர் கிளாடின் அலெக்ஸ் தலைமையில் மலையாள திருப்பலி நடக்கிறது. காலை 11 மணிக்கு 3-வது நாள் தேர் பவனி நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டு திருப்பலியுடன் திருவிழா நிறைவடைகிறது. தேர் பவனியையொட்டி இன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சவேரியாருக்கு புனிதர் பட்டம்
புனித சவேரியார் பசிபிக் கடல் தீவுகள், இலங்கை, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சென்று விட்டு இறுதியாக சீனாவுக்கு செல்லும் வழியில் சான்சியன் தீவில் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இந்தநிலையில் 1552-ம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி உயிர் நீத்தார். அவரது புனித உடல் பல மாதங்களுக்கு பிறகும் அழிவுறாமல் அப்படியே இருந்ததால் அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
இதனால் அதை பாதுகாக்க முடிவு செய்தனர். அதன்படி கோவாவில் நல்ல இயேசு ஆலயத்தில் புனித சவேரியாரின் உடல் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இறைப்பணி வாழ்வுக்காக லட்சக்கணக்கான மைல்கள் தூரம் நடந்து, 100-க்கும் மேற்பட்ட ஊர்களிலும், தீவுகளிலும் இயேசுவின் நற்செய்தியை போதித்து இறைஊழியம் செய்து பெரும் சாதனை புரிந்த சவேரியாருக்கு 1622-ம் ஆண்டு புனிதர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.