வழிபாடு

ஸ்ரீ சத்யநாராயண விரத கதை...!

Published On 2024-02-06 05:46 GMT   |   Update On 2024-02-06 05:46 GMT
  • ஸ்ரீமகாவிஷ்ணு, நாரதருக்கு உபதேசித்த மகிமை பெற்றது.
  • தெய்வ வழிபாட்டில் உயர்ந்தவன்- தாழ்ந்தவன் என்பது ஏது?

பகவான் ஸ்ரீமகாவிஷ்ணு, நாரதருக்கு உபதேசித்த மகிமை பெற்றது இது. மாதம் தோறும் பவுர்ணமி அன்று மாலையில் சந்திர உதய காலத்தில் சத்யநாராயண விரதம் கடைப்பிடித்து பூஜிக்கலாம் என்று ஸ்காந்த புராணம் கூறுகிறது. இயலாதவர்கள் ஞாயிறு, திங்கள், வெள்ளிக்கிழமைகள் மற்றும் அமாவாசை, அஷ்டமி, துவாதசி, சங்கராந்தி, தீபாவளி ஆகிய நாள்களிலும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளிலும் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். சத்யநாராயண விரதம் இருப்பவர்கள், இதன் மகிமையைச் சொல்லும் கதையையும் அவசியம் படிக்க வேண்டும்.

நைமிசாரண்யம் எனும் திருத்தலத்தில் `சத்ர' யாகம் நடந்தபோது, அங்கிருந்த முனிவர்கள், அவர்களின் சீடர்கள், அரசர்கள், அடியார்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் சூதபௌராணிகர் (புராணங்களை யெல்லாம் சொல்பவர்) என்பவர் இந்த கதைகளைக் கூறியதாக ஞான நூல்கள் தெரிவிக்கின்றன.

மிகுந்த செல்வம், பலம் பொருந்திய ஏராளமான படைகள், அன்பான மனைவி - குழந்தைகள் என எல்லாம் கொண்டவன் மன்னன் துங்கத்வஜன். கர்வம் மிகுந்த இந்த மன்னன், ஒருநாள் காட்டில் வேட்டையாடி விட்டுத் தண்ணீர் குடித்து களைப்பைத் தீர்த்துக்கொண்டு திரும்பும்போது, ஆலமரம் ஒன்று தென்பட்டது, அங்கிருந்து பல்வேறு குரல்கள் கேட்டன.

மன்னன் ஆல மரத்தை நோக்கிப் போனான். மர நிழலில் இடையர்கள் பலர் ஒன்று சேர்ந்து, சத்ய நாராயண பூஜை செய்து கொண்டிருந்தனர். அருகில் நெருங்காமல் சற்றுத் தள்ளி ஓர் இடத்தில் உட்கார்ந்த மன்னன், அந்த பூஜையைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான்.

பூஜை முடிந்தது. கலந்து கொண்டவர்கள் அனைவரும் பிரசாதம் சாப்பிட்டார்கள். சற்று தூரத்தில் இருந்த மன்னனைப் பார்த்த அவர்கள், பிரசாதத்தை ஓர் இலையில் வைத்து அவனிடம் கொடுத்தார்கள். அதை வாங்கிய அரசன் சாப்பிடவில்லை.

`ஹும்! இடையர்கள், தந்ததை நாடாளும் மன்னனான நான் சாப்பிடுவதா? இதனால் என்ன லாபம்?' என்று கர்வதோடு பிரசாதத்தை அங்கேயே போட்டுவிட்டு, அரண்மனைக்குத் திரும்பினான். அங்கே அவனை அதிர்ச்சி வரவேற்றது. அவனது நாட்டை, மாற்றான் ஒருவன் கைப்பற்றிவிட்டான். தங்களுக்கும் ஆபத்து வந்துவிடுமோ என்று எண்ணி, மன்னனின் மனைவி-மக்கள் எங்கேயோ ஓடி மறைந்து விட்டார்கள்.

இப்படியான அடி, மன்னனை சிந்திக்க வைத்தது. ''இதற்கெல்லாம் காரணம், எனது அகம்பாவம்தான். சத்ய நாராயண பூஜையை அலட்சியப்படுத்தி, இடையர்கள் தந்த பிரசாதத்தைச் சாப்பிடாமல் தூக்கிப் போட்டுவிட்டு வந்ததன் விளைவே இது!'' என்று சொல்லிக்கொண்டு ஆலமரத்தை நோக்கி ஓடினான் மன்னன்.

மரத்தடியை அடைந்ததும், ''தெய்வமே! மன்னித்துவிடு. தெய்வ வழிபாட்டில் உயர்ந்தவன்- தாழ்ந்தவன் என்பது ஏது? உத்தம பக்தர்களான இடையர்களைப் போய், தாழ்வாக நினைத்தேனே! அவர்களை அவமானப்படுத்தியது, ஆண்டவனான உன்னையே அவமானப்படுத்தியதற்குச் சமம் என்பதைப் புரிந்து கொண்டேன். பெருமாளே! இன்று முதல் நானும் சத்யநாராயண பூஜையை முறையாகச் செய்வேன்!'' என்று அழுது தொழுதான்.

கையில் கிடைத்தவற்றைக் கொண்டு சத்யநாராயண பூஜைக்கு ஏற்பாடு செய்த மன்னன், இடையர்களை அழைத்து, எந்த விதமான வேறுபாடும் இல்லாமல் சத்ய நாராயண பூஜையை செய்தான். நைவேத்தியப் பிரசாதத்தைத் தானும் உண்டு, அவர்களுக்கும் கொடுத்தான்.

அவமானப்படுத்தியபோது தண்டித்த ஆண்டவன், மன்னன் திருந்தியபோது அவனுக்கு அருள் பொழியவும் தவறவில்லை. பகைவரால் கைப்பற்றப்பட்ட நாடு, விரைவில் அந்த மன்னனுக்குக் கிடைத்தது. பயம் நீங்கியதால் மனைவி, மக்களும் திரும்பி வந்தார்கள். அதன்பிறகு சத்யநாராயண விரதத்தைத் தொடர்ந்து செய்து, முக்தி அடைந்தான் அந்த மன்னன்.

Tags:    

Similar News